ஏழாயிரம்பண்ணை, செப். 12: வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் காதணி கண்டெடுக்கப்பட்டது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 குழிகளில் அகழாய்வு பணிகள் முழுமையடைந்துள்ளன. தற்போது 9 மற்றும் 10வது குழிகளில் அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது.
மூன்றாம்கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண் சுடுமண் பொம்மையின் தலைப்பகுதி, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், சூது பவள மணி உள்ளிட்ட 1,700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் தோண்டப்பட்ட 9வது குழியில் சுடுமண்ணால் ஆன காதணி கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில், ‘‘வெம்பக்கோட்டையில் முன்னோர்கள் பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்றும், தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான சான்றும் அதிகளவில் கிடைத்து வருகின்றன. அதிக அளவில் கண்ணாடி மணிகள், காதணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வருவதால் முக அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது தெரியவருகிறது’’ என்றார்.
The post முக அலங்காரத்திற்கு முன்னோர்கள் முக்கியத்துவம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.