இந்நிலையில், கமலா ஹாரீஸ் டிரம்ப் இடையேயான முதல் நேரடி விவாதம் பென்சில்வேனியாவில் செவ்வாய் கிழமை இரவு நடந்தது. இந்த 90 நிமிட நேரடி விவாதத்தில் ஒவ்வொரு நொடியும் அனல் பறந்தது. டிரம்ப்புடன் கைகுலுக்கி விட்டு விவாதத்தை தொடங்கிய கமலா ஹாரீஸ் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளுக்கும் நச்சென்ற பதிலடி கொடுத்தார். ‘நான் அதிராக இருந்திருந்தால் ரஷ்யா, உக்ரைன் போர் நடக்கவே விட்டிருக்க மாட்டேன். இப்போரை நான் முடிவுக்கு கொண்டு வருவேன்’’ என டிரம்ப் ஆவேசமாக கூற, அதற்கு கமலா ஹாரீஸ், ‘‘ஆமாம், 24 மணி நேரத்தில் போரை முடித்திருப்பார் டிரம்ப். எப்படி தெரியுமா? உக்ரைனில் புடினை (ரஷ்ய அதிபர்) அமர வைத்திருப்பார். அடுத்ததாக புடின் போலந்து மீது குறிவைத்திருப்பார். இப்போரில் உக்ரைன் தன்னை சுயமாக தற்காத்துக் கொள்ள அமெரிக்கா உதவுகிறது. உலக நாடுகளும் அதற்காகவே உக்ரைனுக்கு ஆதரவளிக்கின்றன’’ என்றார்.
‘‘கமலா ஹாரீஸ் அதிபரானால் அடுத்த 2 ஆண்டில் இஸ்ரேல் நாடே இருக்காது. அவருக்கு யூதர்களையும் பிடிக்காது, அரபு மக்களையும் பிடிக்காது’’ என டிரம்ப் கூற, அதற்கு கமலா ஹாரீஸ், ‘‘காசாவுக்கு எதிராக இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. ஆனால் அது எப்படி தன்னை தற்காத்துக் கொள்கிறது என்பதுதான் கேள்வி. இந்த விஷயத்தில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க வேண்டும். அப்பாவி பாலஸ்தீனர்கள் பலியானவதை ஒருபோதும் அமெரிக்கா விரும்பாது. போரை நிறுத்தி, பணயக் கைதிகளை விடுவித்து, காசாவை மீண்டும் கட்டமைக்க வேண்டும்’’ என்றார்.
அமெரிக்க மக்களின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றான கருக்கலைப்பு சட்டம் குறித்து பேசிய கமலா ஹாரீஸ், ‘‘தனது உடல் குறித்து முடிவெடுக்க வேண்டிய சுதந்திரம் மக்களுக்குத்தான் இருக்க வேண்டுமென அமெரிக்கர்கள் அனைவரும் விரும்புகின்றனர். இந்த விஷயத்தில் அரசு உத்தரவு போடக் கூடாது. டிரம்ப் அதிபரானால் தேசிய கருக்கலைப்பு சட்டத்தில் கையெழுத்திடுவார். அதன் மூலம் ஒவ்வொருவரின் கர்ப்பம், கருக்கலைப்பு கண்காணிக்கப்படும்’’ எனறார். இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப், கருக்கலைப்பு விதிகளை மாகாணங்களே முடிவு செய்வதே சரியானது என்றார்.
பைடன் ஆட்சியில் அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாகவும், பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த கமலா ஹாரீஸ், ‘‘பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் பற்றி மட்டுமே கவலைப்படுபவர் டிரம்ப். அவரது ஆட்சியில் விதிக்கப்பட்ட வரிகளால் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர். அவரது மோசமான பொருளாதார கொள்கை மற்றும் ஆட்சி போகும் என தெரிந்ததும் நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டியதற்காகவும் தான் அமெரிக்க மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
அதிபர் பைடன் மிகவும் பலவீனமானவர், உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்கிற உணர்வு கூட இல்லாதவர் என டிரம்ப் கூறியதற்கு கமலா ஹாரீஸ், ‘‘பல உலக தலைவர்களை சந்தித்து போது டிரம்ப் எவ்வளவு மோசமானவர் என்பதை விளக்கினார். அவர் ஒரு தொடை நடுங்கி என வெளிநாட்டு அதிபரே என்னிடம் நேரடியாக சொல்லியிருக்கிறார். அதோடு நீங்கள் பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை, கமலா ஹாரீசை எதிர்த்து என நினைவுபடுத்துகிறேன்’’ என்றார். இவ்வாறு, பொருளாதாரம், கருக்கலைப்பு சட்டம், ரஷ்யா-உக்ரைன் போர், மேற்கு ஆசியாவின் பதற்ற நிலை, இனவெறி பிரசாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விக்கு இரு தலைவர்களும் அவரவர் கருத்துக்களையும், பதிலடிகளையும் தந்ததன் மூலம் நேரடி விவாதம் அனல் பறந்தது. இந்த விவாதத்தின் நிறைவில் கமலா ஹாரீசுக்கான ஆதரவுகள் பெருகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post அனல் பறந்த நேரடி விவாதம்; டிரம்புக்கு சுளீர் பதிலடி தந்த கமலா ஹாரீஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் விறுவிறுப்பு appeared first on Dinakaran.