ஓணம், புரட்டாசி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு: பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

 

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். இந்த வருடம் புரட்டாசி மாத தொடக்கமும், ஓணம் பண்டிகையும் அடுத்தடுத்து வருகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து அன்று மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடை திறப்பார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (14ம் தேதி) முதல் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் தொடங்கும்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் பக்தர்களுக்கு ஓணம் விருந்து அளிக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த 8 நாட்களிலும் தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன், உதயாஸ்தமய பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஓணம் மற்றும் புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் திறக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே திருவனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் முன்பதிவு வசதியும் தொடங்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓணம், புரட்டாசி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு: பம்பைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: