நடிகர் முகேஷ் எம்எல்ஏவுக்கு எதிராக புகார் கொடுத்ததால் போலீசார் தொந்தரவு செய்கின்றனர்: பாதிக்கப்பட்ட நடிகை வேதனை


திருவனந்தபுரம்: நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்பட 7 பேர் மீது எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு நடிகை பாலியல் புகார் கூறியிருந்தார். அதன் பேரில் 7 பேர் மீதும் கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முகேஷ், இடைவேளை பாபுவுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் சமீபத்தில் முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிறப்பு விசாரணை குழு தீர்மானித்திருந்தது. ஆனால் முகேஷ் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று விசாரணை குழுவுக்கு கேரள அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு பாதிக்கப்பட்ட நடிகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முகேஷ், இடைவேளை பாபுவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால், நான் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றும் அந்த நடிகை கூறினார். இது சிறப்பு விசாரணை குழுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதாக பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து வாட்ஸ்அப் மூலம் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: முகேஷ், இடைவேளை பாபுவுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து இதுவரை அரசு அப்பீல் செய்யவில்லை.

இது எனது நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது. எனவே இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக போவதாக கூறியிருந்தேன். இதன்பிறகு எஸ்பி பூங்குழலி, என்னை சந்தித்து, பிரச்னைகள் எதுவும் இருக்காது என உறுதியளித்தார். அதன் பின்னர் போலீசார் தேவையில்லாமல் என்னுடைய மற்றும் என்னுடைய குடும்பத்தினரின் தனிமனித உரிமையை பாதிக்கும் வகையில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். முகேஷுக்கு எதிராக புகார் கொடுத்ததால்தான் போலீசார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். முகேஷ், இடைவேளை பாபுவின் முன்ஜாமீனை எதிர்த்து நான் விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகர் முகேஷ் எம்எல்ஏவுக்கு எதிராக புகார் கொடுத்ததால் போலீசார் தொந்தரவு செய்கின்றனர்: பாதிக்கப்பட்ட நடிகை வேதனை appeared first on Dinakaran.

Related Stories: