முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகள் ரத்து

மாமல்லபுரம், டிச.28: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடைபெறும் இந்திய நாட்டிய விழா ஜனவரி 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் ஆண்டுதோறும் ஒன்றிய சுற்றுலாத்துறையும், தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், ஒடிசி, கதகளி, பொய்க்கால் குதிரை, குச்சிப் புடி, மோகினி ஆட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய நாட்டிய விழா கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து, 5 நாட்கள் இந்திய நாட்டிய நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி 27ம் தேதி (நேற்று முதல்) வரும் ஜனவரி 1ம் தேதி வரை 6 நாட்கள் இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த, நிகழ்ச்சி ஜனவரி 2ம் தேதி மாலை வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இந்திய நாட்டிய விழா நிகழ்ச்சிகள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: