ஆம்ஆத்மி எம்பி தொடர்ந்த வழக்கு; கெஜ்ரிவாலை சந்திக்க சட்ட விதியின்படியே அனுமதி மறுப்பு; உச்ச நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் பதில்

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கடந்த ஜூலை 12ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும் இதே விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளியில் வரமுடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க திகார் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் திகார் சிறைத்துறை நிர்வாகம் மூன்று நாளுக்குள் பதிலளிக்க வேண்டும் என கடந்த 4ம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் திகார் சிறை நிர்வாகத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘சிறையிலிருந்து வெளியேறிய கைதிகள் அவர்களது சிறை கைதி நண்பர்களை சந்திக்க அனுமதி வழங்கக் கூடாது என்ற விதிமுறை முறைகள் உள்ளன.

அதன் அடிப்படையில் தான் முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க, சஞ்சய் சிங்கிற்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சஞ்சய் சிங் முன்னதாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ஆம்ஆத்மி எம்பி தொடர்ந்த வழக்கு; கெஜ்ரிவாலை சந்திக்க சட்ட விதியின்படியே அனுமதி மறுப்பு; உச்ச நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் பதில் appeared first on Dinakaran.

Related Stories: