தமிழ்நாட்டில் காலாவதியான 27 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்: மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தல்

 


சேலம்: தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறினார். சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க 76வது மகா சபைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள 937 சுங்கச்சாவடிகளில் 486 சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகளும் காலாவதியானவையாகும். காலாவதியான சுங்கச்சாவடிகளில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் 2036ம் ஆண்டு வரை சுங்கக்கட்டணம் வசூல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவது சம்பந்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் லாரிகள் பத்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே நியாயமான போராட்டத்தை முன்னெடுக்க லாரி உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இல்லை என்றால் 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை. இந்த விஷயத்தில் இனி ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இல்லை. காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும் என சட்டமன்றத்தில் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் காலாவதியான 27 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்: மோட்டார் காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: