டெல்லி: அரியானாவில் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி ஒத்துபோகாத நிலையில், இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன. அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக். 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்டது. தேசிய தலைவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், ஆம்ஆத்மியுடன் கூட்டணி வேண்டாம் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருந்தாலும் இரு தலைமைக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், ஆம்ஆத்மி கட்சி 10 இடங்களைக் கோரியது; ஆனால் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 இடங்களை வழங்க ஒப்புக் கொண்டது. ஆம்ஆத்மி கேட்ட இடங்களை கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லாத நிலையில், கடைசியாக 5 இடங்களுக்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டது.
அதன் தொடர்ச்சியாக ஆம்ஆத்மி கட்சி அதிரடியாக 20 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது. இதன் மூலம் காங்கிரஸ் – ஆம்ஆத்மி இடையிலான கூட்டணி நம்பிக்கை தகர்ந்தது. இதனால் யாருக்கு லாபம் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த 11 இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான அரியானாவிலும் ஆம்ஆத்மி கால்பதிக்க விரும்புவதால், அக்கட்சி உடனான கூட்டணியை மாநில காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை என்கின்றனர். இதற்கு காரணம், இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆம்ஆத்மியால் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி இழக்க வேண்டியிருந்தது. அதாவது, காங்கிரஸின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது.
அரியானாவில் இந்த தவறை செய்ய காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே, ஆம்ஆத்மி ஆதரவுடன் தேர்தலை எதிர்கொள்ள அரியானா காங்கிரஸ் தலைமை உடன்படவில்லை. ஏற்கனவே அரியானா தேர்தல் களத்தில் பாஜக, ஐஎன்எல்டி-பிஎஸ்பி கூட்டணி, ஆசாத் சமாஜ் கட்சி-ஜேஜேபி கூட்டணி தனித்தனியாக தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் தற்போது காங்கிரசும், ஆம்ஆத்மியும் தனித்தனியாக போட்டியை எதிர்கொள்கின்றன. இவ்வாறாக நான்கு, ஐந்துமுனை போட்டி நிலவுவதால், தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பது அக். 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும். அரியானா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது போல், ஜம்மு – காஷ்மீர் தேர்தல் பிரசாரமும் வேகமெடுத்துள்ளது.
The post டெல்லி, பஞ்சாப்பில் இழந்தது போதும்…. அரியானாவில் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி ஒத்துபோகாதது ஏன்?.. மாநில தலைமை அடம் பிடித்ததால் திடீர் முறிவு appeared first on Dinakaran.