அச்சம் தரும் ரயில்வே குடியிருப்பு சீரமைக்க ஊழியர்கள் வலியுறுத்தல்

 

ராமேஸ்வரம்,செப்.10: ராமேஸ்வரத்தில் சேதமடைந்த குடியிருப்பால் ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளதால், பராமரிப்பு பணி மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் வடக்கு பகுதியில் ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்கான குடியிருப்பு கட்டிடங்கள் பல பிரிவுகளாக இருந்தன. இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தற்போது மூன்று குடியிருப்புகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இதில் உள்ள இரண்டாம் வகை குடியிருப்புகள் 14 ஆண்டுகள் பழமையானது. அதாவது 67ஏ, 69ஏ, 79ஏ,எப், 80ஏ, 91ஏ,ஹச் உள்ளிட்ட பிளாக் எண்களில் ரயில்வே போலீசார், இன்ஜினியர், எலக்ட்ரீசியன், மெக்கானிக், சிக்னல் ஊழியர்கள் என மொத்தம் 14 குடும்பங்கள் தங்கியுள்ளனர். தற்போது பாம்பன் புதிய ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய பணிகள் நடைபெற்று வருவதால் இங்கு தங்கியுள்ள ஊழியர்கள் மண்டபம் ரயில் நிலையத்திற்கு பணிக்கு சென்று வருகின்றனர்.

இந்த கட்டிடங்களை ரயில்வே நிர்வாகம் முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததால் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடியிருப்பு கட்டிட வெளிப்புறத்தில் பல இடங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டது பூச்சு கலவைகள் சிதைந்து செங்கல் கட்டுமானங்கள் வெளியே தெரிகிறது. பில்லர் பகுதிகளில் கட்டுமானம் உடைந்து கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே துருப்பிடித்து நிற்கிறது.
இவ்வளவு மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்பு வீட்டுகளுக்கு உள்ளே கான்கிரீட் மேற்கூரை உடைந்து கிழே விழும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் மழை காலங்களில் ஈரக்சிவு ஏற்பட்டு மழைநீர் வீட்டின் உள்ளே இறங்கும் நிலை உருவாகியது. அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளுக்கும் தேவையான தண்ணீரை தேக்கும் தொட்டி சேதமடைந்துள்ள இந்த குடியிருப்பு கட்டிடத்தின் மேலே வைக்கப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்து கிடக்கும் குடியிருப்பில் ரயில்வே ஊழியர்கள் ஒருவித அச்சத்துடன் தங்கி பணி செய்து வருகின்றனர்.

முறையாக பராமரிப்பு செய்து தரக்கோரி மூன்று ஆண்டுகளாக தங்கி இருக்கும் ஊழியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். ஊழியர்கள் அச்சத்துடன் தங்கும் அவல நிலையில் உள்ள சேதம் அடைந்து கிடக்கும் குடியிருப்பு கட்டிடத்தை அதிகாரிகள் உடனே பராமரிப்பு பணி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அச்சம் தரும் ரயில்வே குடியிருப்பு சீரமைக்க ஊழியர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: