ரோந்து செல்லும் போது துப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும்; டிஐஜி சரவணசுந்தர் அறிவுறுத்தல்

கோவை, செப். 7: கோவை சரக காவல்துறையில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேர ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு ரோந்து செல்லும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, குற்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை சரக காவல்துறை சார்பில் கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, அங்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறியதாவது: கோவை சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, இரவு நேர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கிராமங்கள் தோறும் கிராம கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இருப்பார்கள். இந்த குழுவை சேர்ந்தவர்கள் குற்றத்தடுப்பு, பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமங்களில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதனால், குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க மிகவும் இந்த குழு உதவியாக இருந்து வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 1,135 கிராமங்கள், நீலகிரியில் 1,133, திருப்பூரில் 2,358, ஈரோட்டில் 2,793 என்று மொத்தம் 7,419 கிராமங்கள் கண்டறியப்பட்டு கிராம கண்காணிப்பு குழு (வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி) அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் குறைந்தது மாதம் ஒருமுறை கூடி, குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுப்பது, ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல், சந்தேக நபர்களை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கோவையில் 358 கிராமங்கள், திருப்பூரில் 1,030 , ஈரோட்டில் 1,668, நீலகிரியில் 1,133 என மொத்தம் 4,172 கிராமங்களில் ‘கிராம கண்காணி்ப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. மீதமுள்ள கிராமங்களிலும் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குழுவின் செயல்பாடு நல்ல வகையில் இருக்கிறது. இதுதவிர வாகன தணிக்கையில் ஈடுபட கோவை புறநகர் பகுதியில் 159 வாகன தணிக்கை இடங்கள், திருப்பூரில் 56 வாகன தணிக்கை இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க இரவு நேர ரோந்து மிகவும் முக்கியம். அந்த வகையில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து செல்லும்போது அவர்களின் பாதுகாப்பும் முக்கியம். சில பகுதிகளில் போலீசார் ரோந்து செல்லும்போது மர்ம ஆசாமிகள் ஆயுதங்கள் மற்றும் கற்களை தூக்கி வீசும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தை தவிர கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டத்தை சேர்ந்த போலீசார் பாதுகாப்புக்காக துப்பாக்கியை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் கைத்துப்பாக்கியும், போலீசார் எஸ்.எல்.ஆர். வகை துப்பாக்கியையும் எடுத்துச்செல்ல அறிவுரை வழங்கி உள்ளோம். இதனால் தற்போது போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து சென்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post ரோந்து செல்லும் போது துப்பாக்கி எடுத்து செல்ல வேண்டும்; டிஐஜி சரவணசுந்தர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: