பட்டுக்கோட்டை, செப். 6:செப்டம்பர் 5 ஆசிரியர் தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமான நேற்று தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் நீலாவதி தலைமையில், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இருபுறமும் நின்று பள்ளியில் பணியாற்றக்கூடிய 94 ஆசிரியர்களுக்கும் ஒரே இடத்தில் மலர்கள் தூவி, இனிப்பு வழங்கி அன்புடன் தங்களது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் 94 பேரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சதீஷ்குமார் தலைமையில் அணிவகுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இது பார்ப்பவர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஆசிரியர்கள் பேசுகையில், இன்றைய தினம் இங்கு பயிலக்கூடிய மாணவர்கள் அனைவரும் அளவிலாத அன்புடன் எங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தது மிகவும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நாங்கள் இந்த ஆசிரியர் தினத்தை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் உயர்ந்த பண்புகளுடன், நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டனர்.
The post பட்டுக்கோட்டை அரசு மாதிரி பள்ளியில் ஆசிரியர்களுக்கு மலர் தூவி மாணவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.