திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா

திண்டிவனம், செப். 3: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பொறுப்பில்லாத செயல்களாலும் நடவடிக்கையாலும் மாணவர்களின் எதிர்காலமும் கல்லூரியின் நிர்வாகமும் கேள்விக்குறியாகவும் உள்ள நிலையை சரி செய்ய கோரி கல்லூரியின் முன்பாக அமர்ந்து கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கவுரவ விரிவுரையாளர்கள் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் நடைபெற்ற கல்லூரியில் தற்போது பொறுப்பு முதல்வர் முழு நேர கல்லூரி ஆக மாற்றியதால் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மாணவர்களிடம் பொறுப்பு முதல்வர் கல்லூரிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என தெரிவித்ததாகவும் வருகை பதிவை கேட்க மாட்டீர்களா என கேட்டதற்கு மாணவர்களிடம் உங்கள் அனைவரையும் தேர்வு எழுத வைக்க வேண்டியது எனது பொறுப்பு என தெரிவித்ததாகவும், அதனால் மாணவர்கள் வகுப்பு நடக்கும் போது உள்ளே நுழைவதும் எழுந்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டால் முதல்வரே வருகை பதிவு தேவையில்லை என தெரிவித்துவிட்டார் என பேராசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டால் நான் அப்படி தெரிவிக்கவில்லை என கூறுகிறார். இதனால் கல்லூரியில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. கல்லூரியில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்தனர். மேலும் கவுரவ விரிவுரையாளர்களை சந்திக்க பொறுப்பு முதல்வர் மறுக்கிறார். எனவே இதை கண்டித்து தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திண்டிவனம் அரசு கல்லூரி முதல்வரை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: