பி.எஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள் நுழைவுத்தேர்வு இன்றி இனி எம்.எஸ் படிக்கலாம்: சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி பி.எஸ் டேட்டா சயின்ஸ் எனும் 4 ஆண்டு ஆன்லைன் படிப்பை கற்பித்து வருகிறது. இதில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். பி.எஸ். டேட்டா சயின்ஸ் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் (இறுதியாண்டு) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி ரோபரில் நேரடி பயிற்சி பெறுவதற்கான சூழலை சென்னை ஐ.ஐ.டி ஏற்படுத்தி உள்ளது. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நேற்று கையெழுத்தானது. சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி மற்றும் ஐ.ஐ.டி ரோபர் இயக்குநர் ராஜீவ் அஹூஜா ஆகியோர் இடையே கையெழுத்தானது.

இதுதொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை ஐ.ஐ.டி-யில் பி.எஸ். டேட்டா சயின்ஸ் பயிலும் மாணவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். முதுநிலை படிப்புக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் சென்னை ஐ.ஐ.டி தீவிரமாக செயலாற்றி வருகிறது. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.டி ரோபர் இடையே புரிந்துணைர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பி.எஸ் டேட்டா சயின்ஸ் படிக்கும் 4ம் ஆண்டு மாணவர்கள் தங்களின் இறுதியாண்டு படிப்பை, ஐ.ஐ.டி ரோபரில் நேரடியாக சென்று பயில வழிவகை செய்யும்.

இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு ‘கேட்’ நுழைவுத் தேர்வு இன்றி, ஐ.ஐ.டி ரோபரில் எம்.எஸ். படிப்பில் சேர முடியும். அதேபோல், ஐ.ஐ.டி. ரோபரில் படிக்கும் மாணவர்கள், சென்னை ஐ.ஐ.டியில் பி.எஸ் டேட்டா சயின்ஸ் படிப்பையும் பயில இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். மேலும், என்.ஐ.டியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களில் சிறந்த 10 சதவீத மாணவர்கள், சென்னை ஐ.ஐ.டியில் இறுதியாண்டு பயில்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இதில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டியில் ‘கேட்’ நுழைவுத் தேர்வு இன்றி நேரடி பி.எச்.டி பயில முடியும். நாட்டில் முதுநிலை பட்டப்படிப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக, சென்னை ஐ.ஐ.டி. பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பி.எஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள் நுழைவுத்தேர்வு இன்றி இனி எம்.எஸ் படிக்கலாம்: சென்னை ஐஐடி இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: