காங்கேயம் பகுதியில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழப்பு

திருப்பூர்: காங்கேயம் பகுதியில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது. இந்த நிலையில் காங்கேயம் படுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.

இவருக்கு விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்றும் ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளது. இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதனடையே இன்று காலை பொன்னுசாமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தோட்டத்திற்கு வந்து பட்டியில் பார்த்தபோது ஆடுகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது கிணற்றுப் பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார் அப்பொழுது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினர் கயிறுகளை கட்டி ஆடுகளை மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்து விட்டது. இது தொடர்பாக காங்கேயம் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அப்பு குட்டி என்பவர் அது தோட்டத்தில் வளர்த்த மூன்று ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றது. எனவே தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காங்கேயம் பகுதியில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 16 ஆடுகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: