கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ₹1.60 கோடி மோசடி

கள்ளக்குறிச்சி, ஆக. 29: எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1.60 கோடி ேமாசடி செய்ததாக அதிமுக மாவட்ட செயலாளர் மீது அதிமுக நிர்வாகி எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணன்(55). வழக்கறிஞர். இவர் மனைவி மற்றும் நண்பகளுடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, அதிமுகவில் கடந்த 20 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வருகிறேன். அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மீது போடப்பட்ட 9 வழக்குகள் மற்றும் 2022ம் ஆண்டில் உளுந்தூர்பேட்டையில் அமையவுள்ள திருப்பதி தேவஸ்தான போர்டு சார்பில் கட்டப்பட்டு வரும் வெங்கடேசபெருமாள் கோயில் வழக்குவரை அனைத்து வழக்கிலும் குமரகுரு சார்பில் ஆஜராகி வழக்கு செலவாக பணம் வாங்காமல் வழக்கை முடித்து கொடுத்தேன்.

இந்நிலையில் கடந்த 22.1.2024ம் தேதி மாவட்ட செயலாளர் குமரகுரு 2024 நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதிக்கு உன்னை வேட்பாளராக தேர்வு செய்ய கட்சி தலைமைக்கு பரிந்துரைக்க இருப்பதாகவும், உனக்கு எம்பி சீட் வாங்கி தருகிறேன் என்றும், அதற்கு ரூ.2 கோடி தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். அதன்படி கடந்த 26.2.2024ம் அன்று ரூ.65 லட்சம் குமரகுருவிடம் கொடுத்தேன். இரண்டாம் கட்டமாக 1.3.2024ம்தேதி ரூ.50 லட்சம் கொடுத்தேன். மூன்றாவது தவனையாக கடந்த 6.3.2024ம்தேதி ரூ.45 லட்சம் கொடுத்தேன். 3 தவனையாக மொத்தம் ரூ.1.60 கோடி கொடுத்தேன். விழுப்புரம் எம்பி சீட் உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள ரூ.40 லட்சம் கொடுக்கிறேன் என தெரிவித்து இருந்தேன்.

மார்ச் 20ம் தேதி கழகத்தின் சார்பில் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற தேர்தல் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் எனது பெயர் இல்லாமல் வேறு நபர் பெயர் அறிவிக்கப்பட்டதை கண்டு அதர்ச்சியடைந்து குமரகுரு திட்டமிட்டு நம்பவைத்து ஏமாற்றியது தெரியவந்தது. சீட் வாங்கி கொடுப்பதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கேட்டதற்கு குமரகுரு தன்னை தாக்கிவிட்டதாகவும், ரூ.1.60 கோடி பணத்தை பெற்று தருமாறும், குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டால் குமரகுரு மற்றும் அவரது மகன் சதீஷ்(எ) நமச்சிவாயம் ஆகியோர் தான் பொறுப்பாவார்கள் என கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் ₹1.60 கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: