மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணசீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரிப்பு

நெல்லை: மதுரை கோட்டத்தில் மொபைல் போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் ரயில் நிலைய பதிவு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

பின்பு பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பயணச்சீட்டு பெற தானியங்கி இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக மொபைல் போனிலே பயணச்சீட்டு பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது. காகிதம் பயன்படுத்தாமல் பயணச்சீட்டு பதிவு செய்யும் இந்த முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதாக பாராட்டு பெற்றது.

பயணிகளின் வசதிக்காக மதுரைக் கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பதியும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்தை பற்றி விளக்கி கூறவும், பிரச்சாரம் செய்யவும் மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுவினர் மொபைல் போன் செயலி பற்றிய விபரங்களை பயணிகளுக்கு விளக்கி கூறினர். கடந்த ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக சுமார் 26,978 பயணிகள் மொபைல் போன் பயணச் சீட்டுகள் மூலம் பயணம் செய்தனர். தீவிர பிரச்சாரம் காரணமாக இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதம் 68,631 ஆக உயர்ந்தது.

மதுரை கோட்டத்தின் மொத்த பயண சீட்டு விற்பனையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 3.6 சதவீதமாக இருந்த மொபைல் போன் பயணச்சீட்டு பதிவு, கடந்த ஜூலை மாதம் 5.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. காகிதமில்லாத பயணங்கள் ரயில்வேயில் அதிகரித்து வருவதால் ரயில்வே அதிகாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

The post மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணசீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: