ரயில் நிலையத்திற்கு 22 கிமீ சுற்றி செல்ல வேண்டும் மிட்டாரெட்டி அள்ளி-பொம்மிடி சாலை அமைக்க துரித நடவடிக்கை

*பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி : மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து பொம்மிடி வரை செல்லும் சாலையை அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பேரி முதல் காளிகரம்பு வரையிலான பொம்மிடி செல்லும் வனப்பகுதியில், தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வனப்பகுதி என்பதால், கடந்த 50 ஆண்டாக தார்சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை.

சுமார் 3 கி.மீ தூரம் வனப்பகுதியில் சாலை அமைத்தால், 20 கி,மீ வரை சுற்றிசெல்லும் பயண நேரம் குறையும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘நல்லம்பள்ளி ஒன்றியம் கோம்பேரி கிராமத்தில் இருந்து, மலையை தாண்டி காளிக்கரம்பு வரை வனத்துறை வழியாக இணைப்பு சாலை வேண்டும் என 50 ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இங்கிருந்து சென்னைக்கு ரயில் செல்ல பொம்மிடி ரயில் நிலையம் செல்ல வேண்டும் என்றால் 22 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டும்.

ஆனால் மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை அமைத்தால் 8 கி.மீ தூரத்தில் பொம்மிடி சென்றுவிடலாம். சுமார் 1500 மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதியில் சாலை அமைக்க 12 ஏக்கர் பரப்பளவு மட்டும் தேவைப்படுகிறது. இதற்கான மாற்று நிலம் நெற்குந்தி பகுதியில் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. எனவே, மிட்டாரெட்டிஅள்ளி -பொம்மிடி சாலை அமைக்க 7.45 கிமீ. தூரத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரயில் நிலையத்திற்கு 22 கிமீ சுற்றி செல்ல வேண்டும் மிட்டாரெட்டி அள்ளி-பொம்மிடி சாலை அமைக்க துரித நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: