மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் விபத்து வழக்குகள் பதிவு

*நீதிமன்ற திறப்பு விழாவில் எஸ்பி தகவல்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 2 ஆயிரம் விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

நாமக்கல்லில் புதியதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் திருச்செங்கோட்டில் கூடுதல் சார்பு நீதிமன்றம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்து பேசினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்துக் குத்தூஸ், முகமதுசபீக் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ)கிருஷ்ணகுமார், புதிய நீதிமன்றங்களை தொடங்கி வைத்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 31 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் 31ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மற்ற மாவட்டங்களை காட்டிலும், நாமக்கல் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகிறது. இங்கு சிறந்த வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். தமிழகத்தில் நீதிமன்றங்களுக்கான அடிப்படை வசதிகள், மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நீதிமன்றங்களில், சாலை விபத்து வழக்குகள் மற்றும் பாகப்பிரிவினை வழக்குகள், 20 முதல் 25 ஆண்டுகள் வரை நிலுவையில் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும். எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை, விரைந்து முடிக்க வேண்டும். தற்போது காலமும், நீதிமன்ற சூழலும் மாறிவிட்டது. ஒரு வழக்கு எதற்காக நிலுவையில் உள்ளது என்பதை, வழக்கு தொடர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளமுடியும். வழக்குகளை விரைவாக முடிப்பதில், வழக்கறிஞர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது.

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் செயல்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள 2 நீதிமன்றங்கள் மூலம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இதன் மூலம் மற்ற நீதிபதிகளின் பணிச்சுமையும் குறையும். நீதிமன்றங்களுக்கு தேவையான புதிய கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர் போன்றவை கேட்டு கோரிக்கைகள் வந்துள்ளது. அவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நாமக்கல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் மோகன்ராஜ் பேசுகையில், ‘நாமக்கல்லில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றம், 8 நீதிமன்றங்களுக்காக கட்டப்பட்ட கட்டிமாகும். தற்போது இங்கு 16 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இதனால் இடநெருக்கடி அதிகம் இருக்கிறது. எனவே, நீதிமன்றங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும். மேலும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், நீதிமன்ற கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது.

சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நீதிமன்ற வளாகத்தில் இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்,’ என்றார்.இதில், மாவட்ட கலெக்டர் உமா, எஸ்பி ராஜேஷ்கண்ணன், நாமக்கல் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன்ராஜ், குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அய்யாவு ஆகியோர் பேசினர். நாமக்கல் மாஜிஸ்திரேட் விஜயகுமார் நன்றி கூறினார்.

கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை

விழாவில் மாவட்ட கலெக்டர் உமா பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த கடைகோடி மக்களுக்கும், விரைவாக நீதி கிடைக்க தேவையான நடவடிக்கையை நீதித்துறையுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாதம்தோறும் மாவட்ட நீதிபதிகளுடன் இணைந்து, ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறோம். புதிய நீதிமன்றங்கள் அமைக்க கட்டிடத்துக்கு இடம் ஒதுக்கவும், கூடுதல் கட்டிடங்கள் கட்டி கொடுக்கவும் வருவாய்த்துறை மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றார்.

விழாவில், மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 2ஆயிரம் விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாலை விபத்து வழக்குகளை விரைவாக முடிக்கவும், காவல்துறை விரைவாக விசாரணை செய்து வருகிறது,’ என்றார்.

The post மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் விபத்து வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: