அரசு டாக்டரை ஏமாற்றி ஆன்லைனில் பணம் பறிப்பு

 

புதுச்சேரி, ஆக. 26: ராணுவ வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை ஆர்டர் எனக்கூறி அரசு டாக்டரை ஆன்லைனில் ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் ஏனாமில் வசிக்கும் அரசு மருத்துவர் ஒருவரை, ராணுவ சீருடையில் தொடர்பு கொண்ட இணையவழி மோசடிக்காரர், தான் ராணுவத்தில் வேலை செய்வதாகவும், ராணுவத்தில் வேலை செய்கின்ற நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தால் நபர் ஒருவருக்கு அதிக பணம் கொடுக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

வீடியோ காலில் ராணுவ சீருடையில் இருந்ததால் உண்மையான ராணுவ வீரர் தான் என டாக்டர் நம்பியுள்ளார். ராணுவ வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வரும்போது, உங்களுக்கு உணவு, இருப்பிடம் ஆகியவை இலவசமாக கொடுப்போம் என்றும், 15 நாட்களுக்குள் மிக அதிகமான ராணுவ வீரர்களுக்கு நீங்கள் சோதனை செய்யுங்கள், அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம் என பல்வேறு புகைப்படங்களை காட்டியுள்ளனர். மேலும், உங்களுக்கு இந்த ஆர்டர் கிடைக்க வேண்டும் என்றால், நாங்கள் சொல்கின்ற இந்த வங்கி கணக்கிற்கு ரூ.77 ஆயிரம் அனுப்புமாறும், நாங்கள் உடனடியாக அந்த ஆர்டரை உங்களுக்கு வாங்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய டாக்டர், அவர்கள் கூறிய அக்கவுண்டிற்கு ரூ.77 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன்பிறகே, தான் ஏமாந்ததை டாக்டர் உணர்ந்தார். இது குறித்து டாக்டர், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இணையவழி போலீசார் விசாரித்து வருகின்றனர். இணைய வழியில் வருகின்ற எதையும் நம்பி, பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரசு டாக்டரை ஏமாற்றி ஆன்லைனில் பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: