ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்கிறார்கள். கலைஞரிடம் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்து, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா?
துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம் என்பார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா என ஒன்றும் புரியாது. இதற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன். இந்த புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு அதை நான் வாங்குவதில் பெருமைப்படுகிறேன்.
இந்த நூல் ஒரு காவியம். கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில், கலைஞர் குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் அரைமணி நேரம் புகழ்ந்து பேசியிருக்கிறார். அவராக பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும். ஒரு சிலர் தான் சமூகத்துக்கு, இனத்துக்காக போராடி பாடுபடுவர்கள். அதில் கலைஞர் முக்கியமானவர். அவர் சந்தித்த சோதனைகள், விமர்சனங்களை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால் காணாமல் போயிருப்பார்கள். விமர்சனங்கள் அவசியம். அது மலை போல் இருக்க வேண்டும்.
புயல் போல் இருக்க கூடாது. புயல் போல் இருந்தால் செடி என்ன, மரங்களே சாய்ந்துவிடும். ஆனால் கலைஞர் ஆலமரம். வேர் மிகவும் வலுவானது. உடன்பிறப்புகள் என்ற அவரது வேர்கள் மிகவும் வலிமையானவை. இல்லாவிட்டால், 12 வருடம் ஆட்சியில் இல்லாவிட்டால் கூட கட்சியை காப்பாற்ற முடியுமா? 5 வருடம் இல்லாவிட்டாலே திண்டாடுகிறார்கள். கலைஞர் இறந்த பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அவர் குறித்து படம் எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யார் மனதையும் நோகடிக்காதீர்கள். எப்போதும் சந்தோஷமாக இருக்கும் கலைஞர் 2 தருணங்களில் மட்டும் சோகமாக இருந்ததை பார்த்துள்ளேன். ஒன்று முரசொலி மாறன் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த தருணம். இரண்டாவது தருணம், ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி சென்றபோது, தலைமை செயலகத்தில் அவரை சந்தித்தபோது சோகமாக இருந்தார்.
அரசாங்கத்தையும், அரசையும், லஞ்சம் தொடர்பாக விமர்சித்த படம் ‘சிவாஜி’. அந்த படத்தை கலைஞர் வந்து பார்த்தார். படத்தை பார்த்து கலைஞர் சொன்னார், நமக்கும் இந்த லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று ஆசை என்று பெருமூச்சு விட்டார். அந்த மூச்சில் பல ஆயிரம் விஷயங்கள் இருந்தது. நான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது கலைஞர் என்னை நேரில் சந்தித்தார். அவர் கண்ணில் கண்ணீர் இருந்தது. அவர் பூ வை விட மிகுவும் மென்மையானவர். இவ்வாறு அவர் பேசினார்.
The post சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமை உழைப்பு, அரசியல் ஞானத்தால் தான்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு appeared first on Dinakaran.