நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அத்தனையையும் புரிந்துகொண்டேன், பயப்பட வேண்டாம் எதிலும் நான் தவறிவிடமாட்டேன் எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்: எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அத்தனையையும் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி முதல் நூலை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். சிப்பிக்குள் இருந்து புத்தகம் வருவதை போல தத்ரூபமாக புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் புத்தகத்தை காட்சி வடிவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆய்வுரை செய்தார். அமைச்சர் எ.வ.வேலு ஏற்புரை வழங்கினார். இந்து குழுமத்தின் இயக்குனர் இந்து என்.ராம் சிறப்புரையாற்றினார். சீதை பதிப்பகத்தின் கௌரா ராசசேகர் கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘தாய்’ காவியத்தை கவிதை நடையில் தீட்டிய கலைஞருக்கு தமிழோவியம் தீட்டி இருக்கிறார் வேலு.கலைஞர் எனக்கு தந்தை மட்டுமல்ல;

தாயும் அவர் தான். எனக்கு மட்டுமல்ல, எ.வ.வேலுவை போல லட்சோபலட்சம் உடன்பிறப்புகளுக்கு தந்தையாய் – தாயாய் – தலைவராய் இருந்து – நம்மையெல்லாம் வளர்த்து – போற்றிய அற்புத ஆளுமைதான் கலைஞர். கலைஞருடைய தாய் அதாவது, என்னுடைய பாட்டி அஞ்சுகம் அம்மாள் அவரைப் பற்றி, கலைஞர் மிக மிக உருக்கமாக எழுதுவார்… இன்னும் சொல்லவேண்டும் என்றால், அதைவிட உருக்கமாக எழுதியவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி. அஞ்சுகம் அம்மையார் தங்களுக்கு எப்படியெல்லாம் உணவூட்டி, அன்பு காட்டி வளர்த்தார் என்று அவர்கள் பேசியிருக்கிறார்கள்.

கலைஞர் எ.வ.வேலுவை பாராட்டும்போது, எ.வ.வேலு என்றால் “எதிலும் வல்லவர்” என்று பாராட்டுவார். 2011ம் ஆண்டு வேலுவின் மகன் கம்பன் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வராக இருந்த கலைஞர் பேசிய போது, குறிப்பிட்டுச் சொன்னார். அப்போது உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதைக் குறிப்பிட்டதுடன், ரேஷன் கடைகள் செயல்பாட்டைப் பாராட்டி, “தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பின்பற்றவேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் பாராட்டியதைச் சொல்லி, “வேலுவைப் போன்ற ஆற்றல் பெற்றவர்களாக அனைத்து அமைச்சர்களும் வரவேண்டும்’ என்று பாராட்டினார் கலைஞர்.

அதேபோல, கலைஞர் சொன்ன இன்னொரு முக்கியமான பாராட்டும் இருக்கிறது… “நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அதை என் வாயால் சொல்லாமலேயே, என் கண் அசைவின் மூலமாகவே அதை உணர்ந்து செய்து முடிக்கின்ற ஆற்றல் உள்ளவர்களில் தம்பி வேலுதான் முதலிடத்தில் இருக்கிறார்” என்று பாராட்டினார். இன்று எனக்கும் அதேபோலதான் வேலு இருக்கிறார். ஆறாவது முறை திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பொறுப்பை வேலுவிடத்தில் ஒப்படைத்தேன்.

சென்னை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம். கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம். திருவாரூரில் கலைஞர் கோட்டம் – ஆகியவை வேலுவின் திறமைக்குச் சாட்சியங்களாக இன்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஏன் அண்ணா அறிவாலயத்திலும், முரசொலி அலுவலகத்திலும் அமைக்கப்பட்ட கலைஞர் சிலைகளை அமைத்தவரும் அவர்தான். இவை எல்லாவற்றுக்கும் தலையாய சாதனைதான் கடற்கரையில் அமைந்திருக்கின்ற கலைஞர் உலகம்.

அதைத்தான் சூப்பர் ஸ்டார் குறிப்பிட்டார். அவர் திரைப்படம் எடுத்திருக்கிறார் – கூத்து கட்டுவார் – சினிமாவிலும், நாடகத்திலும் நடித்திருக்கிறார். எத்தனை வேலைகள் கொடுத்தாலும், அவை அத்தனையும் சிறப்பாகச் செய்து காட்டும் வல்லமை வேலுவுக்கு உண்டு. எல்லோரும் சொன்னதுபோல, எதிலும் வல்லவரான வேலு, எழுத்திலும் வல்லவர் என்று இந்த புத்தகத்தின் மூலமாக. இன்றைக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட வேலு, திருக்குறளையும், கலைஞரையும் இணைத்தும் பிணைத்தும் இந்த நூலை எழுதி இருக்கிறார். திருக்குறள் பாதையில் கலைஞர் எப்படி நடந்து காட்டுவார் என்று பொருத்தமான குறள்களில் தேர்ந்தெடுத்து, இணைத்து எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு கட்டுரைகளின் தலைப்புகளுமே, தனியாக ஒரு புக் டைட்டில் மாதிரி இருக்கிறது. குவளையில் பூத்த குறிஞ்சி மலர்! கருணையும் நிதியும் கலைஞர் ஆன கதை! ஐந்தாம் தமிழ்ச் சங்கம் அண்ணன் கலைஞர். காலத்தை வென்ற காவியத் திருமகன்! தமிழின் தலைவாயில்! தமிழரின் கலைக்கோவில்! – இப்படி அழகான தலைப்புகளை எழுதியிருக்கிறார்.

கலைஞர் எழுதினால், தமிழ் கொட்டும் என்பது எவ்வளவு உண்மையோ – அதுபோல கலைஞரைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும் என்பதற்கு “கலைஞர் எனும் தாய்” நூலும் ஒரு எடுத்துக்காட்டு. மிசா காட்சிகளை விவரிக்கும்போது நானும் இந்த புத்தகத்தில் வருகிறேன். நான் தாக்கப்பட்ட காட்சிகளையும் இந்த புத்தகம் சொல்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் கலைஞர் எப்படி செயல்பட்டார் என்று வேலுவின் சொற்களில் படிக்கும்போது நான் உணர்ச்சி வசப்பட்டேன். எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.

மிசாவில் கைது செய்யப்பட்ட திமுக உடன்பிறப்புகளை, அவர்கள் குடும்பங்கள் பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கலைஞர் சிறைத்துறையிடம் சென்று வாதாடுகிறார். ஆனால், அவர்கள் என்னை மட்டும், உங்கள் மகனை மட்டும் நீங்கள் சந்திக்க அனுமதி தருகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அந்த சமயத்திலும் மற்ற திமுக தோழர்கள் அவர்கள் குடும்பங்களைச் சந்தித்த அனுமதித்த பிறகுதான் என்னுடைய மகனை நான் சந்திப்பேன் என்று கலைஞர் சொன்னார். கடைசியாகதான் என்னை வந்து சந்தித்தார்.

அப்படிப்பட்ட தலைவர் கலைஞரை நினைத்தாலே நம்முடைய உள்ளத்தில் ஒலிக்கின்ற குரல்…“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…” அது ஏதோ வார்த்தை அலங்காரம் இல்லை! உயிரினும் மேலானவர்களாக உடன்பிறப்புகளை மதித்தார் கலைஞர். இந்த புத்தகத்தில் நான் மட்டுமில்லை, தம்பி உதயநிதியும் இருக்கிறார். 1977ம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் இருந்து கலைஞர் எனக்கு எழுதிய கடிதத்தில், “1953ம் ஆண்டு நான் திருச்சி சிறையில் இருந்தபோது நீ கைக்குழந்தை.

உன் அம்மா தூக்கிக் கொண்டு வந்து சிறையில் காண்பித்தார்கள். இப்போதும் நான் சிறையில் இருக்கிறேன், உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான். அந்தப் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான்” இந்த அனுபவங்கள் எல்லாம் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா! இந்த குடும்பத்தில் மட்டுமல்ல, நமது இயக்கமாம் இந்த பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள்..\\” வாய்க்கும் என்று எனக்கு எழுதினார். இதுபோல, பல செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

கலைஞரின் வரலாற்றுடன் திமுக வரலாறும் இதில் இருப்பதைத்தான் இந்த நூலின் மிக மிகச் சிறப்பானதாக கருதுகிறேன். “சோதனை எனும் நெருப்பில் புடம் போட்ட சொக்கத் தங்கமாக விளங்கும் வரலாற்றுக்கு உரிமை படைத்த ஒரு பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று எழுதி இருப்பதைப் படிக்கும்போது இந்த இயக்கத்தின் தலைவன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன். இந்திய வரைபடத்தில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த கலைஞருக்கு இன்று இந்திய அரசே நாணயம் வெளியிடுகிறது என்றால், ‘அத்தகைய புகழ்மிக்க தலைவரின் உடன்பிறப்புகள்தான் நாம்’ என்பதைவிட, நமக்கு என்ன பெருமை வேண்டும்.

அவருடைய புகழையும், பெருமையையும் அடுத்து வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதோடு, இனம், மொழி, மாநிலம் காக்க எந்நாளும் உழைப்பதுதான் கலைஞருக்கு நாம் காட்டக்கூடிய உண்மையான நன்றி. என்றும் இறவாத தாய்க் கலைஞர் வாழ்க! வாழ்க! என வாழ்த்தி, எ.வ. வேலுவையும் மனதார பாராட்டி, இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல சூப்பர் ஸ்டார் வருகை தந்து மனந்திறந்து என்னை ஊக்கப்படுத்தக்கூடிய வகையில், என்னைவிட ஒரு வயது கூடதான், அதனால் அறிவுரையும் சொன்னார்.

அவர் சொன்ன அத்தனையையும் புரிந்துகொண்டேன். பயப்படவேண்டாம். எதிலும் நான் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற அந்த உறுதியை அவருக்கும் தெரிவித்து, அவருக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்து, இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக அமைத்து நம்மையெல்லாம் பெருமைப்படுத்தியிருக்கக்கூடிய எ.வ.வேலுவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி, நன்றி, நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

புத்தகம் வெளியீட்டு விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி மற்றும் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட அனைத்து எம்பிக்கள், அமைச்சர்கள், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்,

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், நக்கீரன் கோபால், மு.க.தமிழரசு, செல்வி, நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, எம்பி, எம்எல்ஏக்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* கலைஞர் எழுதினால், தமிழ் கொட்டும் என்பது எவ்வளவு உண்மையோ – அதுபோல கலைஞரைப் பற்றி எழுதினாலும் தமிழ் கொட்டும் என்பதற்கு “கலைஞர் எனும் தாய்” நூலும் ஒரு எடுத்துக்காட்டு.

The post நடிகர் ரஜினிகாந்த் சொன்ன அத்தனையையும் புரிந்துகொண்டேன், பயப்பட வேண்டாம் எதிலும் நான் தவறிவிடமாட்டேன் எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன்: எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: