பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சி விவரம் வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்

சென்னை: பழனியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு 2 நாள் நிகழ்ச்சி விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியானது மங்கள இசையுடன் தொடங்கி, மாநாட்டு கொடியினை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைத்திடவும், சிறப்புக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, வேல் கோட்டத்தினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கி வைக்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, மாநாட்டின் தொடக்க விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கவுரை ஆற்றவும், தருமபுர ஆதீனம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் சுப்பிரமணியன், பி.புகழேந்தி, வி.சிவஞானம் ஆகியோர் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.

பின்னர், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து “உலகளாவிய உயர்வேலன்” என்ற தலைப்பில் மலேசியா நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் ஒய்.கி.டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான், இங்கிலாந்து இப்ஸ்விச் மேயர் இளங்கோ கே.இளவழகன், சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆறுமுகம் செந்தில்நாதன், ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றிடவும், கலைமாமணி சுகிசிவம் தலைமையில் முருகன் புகழ் வளர்க்கும் முத்தமிழில் “முந்து தமிழ்“ என்ற தலைப்பில் சிந்தனை மேடையும், கலைமாமணி சுதா ரகுநாதன் குழுவினர் மற்றும் ஊர்மிளா சத்தியநாராயணன் ஆகியோரின் இசை நாட்டிய நிகழ்ச்சிகளும், கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

2ம் நாள் நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைக்கவும், கோவை கெளமார மடம் குமரகுருபர சுவாமிகள் ஆசியுரை வழங்கவும், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், மொரீசியஸ் தமிழ்க் கோயில்கள் கூட்டிணைப்பின் தலைவர் செங்கண் குமரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் சிறப்புரையாற்றவும், தேசமங்கையர்க்கரசி, சுசித்ரா பாலசுப்பிரமணியம், நித்ய மகாதேவன் குழுவினரின் நிகழ்ச்சி, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வேலுபிள்ளை கணேஷ்குமார், இங்கிலாந்து துணை மேயர் அப்பு தாமோதரன், இலங்கையை சேர்ந்த ஆறுதிருமுருகன், கவிஞர் உமாபாரதி ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

மாநாட்டின் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.வேல்முருகன் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழ கவிராயர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்திட உள்ளார். அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சி விவரம் வெளியீடு: இந்து சமய அறநிலையத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: