நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் மின்வாரிய அதிகாரி தெரிவித்தார். குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவபாலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் ஜான்சிலின் விஜிலா, நீலபெருமாள், அம்பிளி, பரமேஸ்வரன், லூயிஸ், ஷர்மிளா ஏஞ்சல், ஜோபி, ராஜேஷ்பாபு, செலின்மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
மெர்லியன்ட் தாஸ்: மாவட்டத்தில் கன்னியாகுமரி – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாக உள்ளது. மார்த்தாண்டம் பாலம் பகுதியில் பள்ளங்கள் அதிகம் காணப்படுகிறது. இவை எப்போது சீரமைக்கப்படும்?
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி: கன்னியாகுமரி – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ₹15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொள்வதா?
அல்லது மாநில நெடுஞ்சாலை துறை மேற்கொள்வதா? என்பது முடிவு செய்து பணிகள் நடைபெறும். 12.35 கி.மீ தூரம் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் பேட்ஜ் ஒர்க் பணிகள் முடிந்த பின்னர் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இதற்கு முன்னர் இவ்வாறு சிறப்பு நிதி பெற்றுதான் 11 கி.மீ தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளுக்கு என்று ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படுவது இல்லை.
மெர்லியன்ட் தாஸ்: குமரி மாவட்டத்தில் 4 வழி சாலையை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் உடன் இணைக்கும் புதிய சாலை பணிகள் யார் மேற்கொள்வார்கள். நெடுஞ்சாலைத்துறைதான் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரி: உள்ளாட்சி அமைப்புகள் இதற்கு கருத்துரு அனுப்ப வேண்டும்.
ராஜேஷ்பாபு: குமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
சுற்றுலா அலுவலர்: குமரி மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தலங்களை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மேம்பாடு செய்யப்படுகிறது.
மெர்லியன்ட் தாஸ்: குமரி மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா?
மின்வாரிய அதிகாரி: குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ரத வீதிகளில் பூமிக்கு அடியில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சிறு நகர பகுதிகளில் செயல்படுத்த முடியும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பூமிக்கு அடியில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார். ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் இதற்காக கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின் தடை ஏற்படும்போது அதனை சீர் செய்ய காலதாமதம் ஏற்படும்.
மெர்லியன்ட் தாஸ்: அயலக தமிழர் நலத்துறை சார்பில் நலவாரிய பணிகள் எந்த அளவு உள்ளது?
அயலக தமிழர் நலத்துறை அலுவலர்: குமரி மாவட்டத்தில் அயலக தமிழர் நலத்துறை சார்பில் திங்கள் கிழமைதோறும் காலையில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலெக்டர் அலுவலக 3 வது மாடியில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதற்கு ஊராட்சிகளில் களப்பணியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறோம். வெளி
நாடுகளில் வேலைக்காக செல்கின்றவர்கள் இந்த நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறலாம். காப்பீடு திட்டங்களிலும் சேர, இழப்பீடு பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கொல்லம் – மதுரை ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் கோதுமை, பாமாயில், பருப்பு போன்ற பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திற்பரப்பு அருவி மற்றும் மாத்தூர் தொட்டி பாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி வாகன நிறுத்துமிடம், பூங்கா போன்றவை அமைக்கப்பட வேண்டும்.
குளச்சலில் நவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த மீன் சந்தை அமைக்கப்பட வேண்டும். விவசாயிகள் நலன் கருதி மா, பலா வாழைப்பழ கண்காட்சி ஆண்டுதோறும் நடத்த வேண்டும். தோவாளை மற்றும் சந்திப்பு ரயில் நிலையங்கள் இடையில் காலியாக உள்ள இடத்தில் ரயில்வே சரக்கு பெட்டக இறக்கு மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2134 புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்
மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படும் என மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியண்ட் தாஸ் கேட்டதற்கு,பதிலளித்து வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது, குமரி மாவட்டத்தில் புதிய ரேஷன்கார்டு கேட்டு 5964 விண்ணப்பங்கள் வந்தது. இதில் 3353 விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு 2134 புதிய ரேஷன்கார்டுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளளது.
மேலும் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 14 ஆயிரத்து 751 என்பிஎச்எச் கார்டுகள் பிஎச்எச் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 17 ஆயிரத்து 920 ஏஒய்ஒய் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஏஒய்ஒய் ரேஷன்கார்டுகள் வழங்கப்படும்போது ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் இருந்து மாற்றம் பெற்றவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு அதற்கேற்ப புதிய கார்டுகள் வழங்கப்படும். மாவட்டத்தில் கடந்த மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 48 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post நாகர்கோவில் மாநகர பகுதியில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டம் appeared first on Dinakaran.