குழந்தைகள் விரும்பும் ஆம்லா, பீட்ரூட் லட்டுகள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘கணிதத்தில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் போதே, ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. படிப்பு முடித்ததும் திருமணம், அதன் பிறகும் என் வேலையை தொடர்ந்தேன். அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், நானும் என் கணவரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தோம். வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்தாலும், எனக்கு வேலை நேரம் போக வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டாலும், எனக்கான சில மணி நேரம் என்னால் ஒதுக்க முடிந்தது.

அந்த நேரத்தில் ஏதாவது பயனுள்ளதா செய்யலாம்னு தோன்றியது. அந்த சமயத்தில் பேக்கிங் கற்றுக் கொண்டேன். கொரோனா எல்லாம் சரியான பிறகு மறுபடியும் அலுவலகம் செல்ல வேண்டியதாக இருந்தது. அப்போது எனக்கான அந்த சில மணி நேரம் ஒதுக்க முடியவில்லை. அலுவலகம், குழந்தைகள் என்று சரியாக இருந்தது. பேக்கிங் செய்வதை அப்படியே விட்டுவிட்டேன்’’ என்கிறார் செங்கல்பட்டை சேர்ந்த சத்யா. தற்போது இவர் ‘இனியாழ் இனிப்பகம்’ என்ற பெயரில் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் உணவுகளை வழங்கி வருகிறார்.

‘‘பொதுவாக பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பிரத்யேகமாக சில உணவு வகைகள் கொடுப்பது வழக்கம். அதாவது, பூப்படையும் சமயம், நாட்டுக்கோழி முட்டை, நல்லெண்ணெய், உளுந்தங்களி, கஞ்சி கொடுப்பார்கள். குழந்தை பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் பச்சைப் பயறு, கருப்பு உளுந்து, உலர் பழ வகைகள் அதிகம் சேர்த்துக்கொள்ள சொல்லுவாங்க. இதெல்லாம் பொதுவா கிராமங்களில் இன்றும் பின்பற்றி வருகிறார்கள்.

நகரத்தில் இந்த உணவுகள் குறித்து தெரிந்தவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைபடி பின் தொடர்கிறார்கள். எனக்கு முதல் குழந்தை பிறந்த போது என் அம்மாவும் இதெல்லாம் செய்து கொடுத்தாங்க. அப்போது நான் இதை பெருசா எடுத்துக்கல. ஆனால் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த சமயத்தில் அம்மாவால இதெல்லாம் செய்துதர முடியல. அவங்க அப்ேபாது செய்து கொடுத்ததை நினைவில் கொண்டு நானே பச்சைப் பயறு, கருப்பு உளுந்து லட்டுகளை செய்து சாப்பிட்டேன். பொதுவா எங்க அம்மா ஊரு பக்கம் குழந்தை பிறந்தவங்களுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் இந்த மாதிரி லட்டுகள் செய்து குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் குடுப்பாங்க.

நானும் அப்படித்தான் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டும்தான் இதனை சாப்பிடணும்னு நினைச்சேன். ஆனால் நான் திருமணமாகி என் கணவர் வீட்டிற்கு வந்த போது, அங்கு இது போன்ற உணவுகளை வீட்டில் செய்வதை நான் பார்க்கவில்லை. அதனால் நான் அதை செய்ய ஆரம்பித்தேன். வீட்டில் எனக்காக செய்யும் போது நான் என் மகனுக்கும் பள்ளி ஸ்னாக்ஸாக கொடுத்து அனுப்புவேன்.

அதைப் பார்த்து அவனுடைய நண்பர்களின் அம்மாக்கள் இதை செய்து தரச்சொல்லியும் அதன் செய்முறையும் கேட்டார்கள். அப்போதுதான் இதையே ஏன் பிசினஸாக செய்யக்கூடாதுன்னு எனக்கு எண்ணம் ஏற்பட்டது. எனக்கு பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, ஏதாவது பிஸினஸ் செய்யணும்னு ஆசை இருந்தது. ஆனால் படிக்கும் போதே வேலை கிடைத்ததால், என் கவனம் அதில் சென்றுவிட்டது. பிசினஸ் செய்வது பற்றிய யோசனை வரவில்லை. இப்போது தான் ஐடியா இருக்கே செய்தால் என்ன என்று தோன்றியது. என் கணவரிடம் இது குறித்து சொன்ன போது அவர் கொடுத்த அந்த தன்னம்பிக்கைதான் என்னை இந்த பிசினஸ் செய்ய ஊக்குவித்தது’’ என்றவர் அவரின் பிசினஸ் குறித்து விவரித்தார்.

‘‘நாங்க முன்பு சேலத்தில் இருந்தோம். அங்கு குறைந்த அளவுதான் செய்வேன். நான் மட்டுமே செய்து வந்ததால், ஆர்டரின் அளவுக்கு ஏற்பதான் செய்வேன். டெலிவரிக்கு மட்டும் ஒருவரை நியமித்து இருந்தேன். அன்றைக்கு வரும் ஆர்டரை அன்று மாலையே டெலிவரி செய்திடுவேன். சேலம் மட்டுமில்லாமல், திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற பகுதியில் இருந்தும் நிறைய ஆர்டர் வரும். செங்கல்பட்டிற்கு வந்த பிறகு, ஆர்டர்கள் நிறைய வர ஆரம்பித்தது. நாங்க வசிப்பது ஒரு ஐ.டி பார்க் என்பதால், பெரிய அளவில் ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.

அதனால் 4 பெண்களை பணிக்கு நியமித்து செய்து வருகிறேன். கடை போல் அமைத்திருந்தால், தினமும் ஒரு குறிப்பிட்ட விற்பனை இருக்கும் என்பதால், அதிக அளவில் மூலப் பொருட்கள் வாங்கி லட்டுகளை தயாரித்து வைக்கலாம். ஆனால் நான் முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் விற்பதால், ஆர்டரைப் பொறுத்துதான் அதற்கு தேவையான மூலப் பொருட்களை வாங்குவேன். என்னுடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆர்டர் போடுவார்கள். அதில் ஒரு சிலர் தினசரி கேட்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு பள்ளிக்கு ஸ்னாக்ஸ் கொடுக்கதான் ஆர்டர் செய்வாங்க. இன்று ஆர்டர் கொடுத்தால், நாளை அதனை கொரியர் அனுப்பிடுவோம்’’ என்ற சத்யா நாளொன்றுக்கு எட்டிலிருந்து 10 கிலோ வரை லட்டுகள் தயாரித்து விற்பனை செய்கிறார்.

‘‘பொதுவாக கடைகளில் ராகி லட்டு, பாசிப் பயறு லட்டு, நெய் லட்டு கிடைக்கும். இவை தவிர முருங்கை லட்டு, கறிவேப்பிலை லட்டு, ஹீமோகுளோபின் லட்டு (பீட்ரூட்), ஆம்லா லட்டு, கருப்பு கவுனி லட்டு, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கென பிரத்யேகமாக செய்யப்பட்ட லட்டு, ட்ரை ஃப்ரூட் லட்டுகள் என பல வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். முருங்கை கீரை, கறிவேப்பிலை இரண்டுமே ஓரளவுக்கு கசப்பு தன்மை உடையது. அதில் லட்டு செய்வது சாத்தியமா என்று என் வாடிக்கையாளர்களே கேட்பார்கள். முருங்கை கீரை, கறிவேப்பிலை ரெண்டுமே கொஞ்சம் கசக்கும் தன்மை உடையதுதான். அதில் சிறுதானியங்கள், நெய் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்க்கும் போது அதன் கசப்பு தன்மை மாறிடும்’’ என்றவர், பீட்ரூட் மற்றும் ஆம்லா லட்டுகளை செய்ய ஆரம்பித்த காரணத்தை குறிப்பிட்டார்.

‘‘எனக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கு என மருத்துவர்கள் சொன்னபோது, என் அம்மா எனக்கு ஆம்லா, பீட்ரூட் மற்றும் பச்சைப் பயறு லட்டு செய்து கொடுத்தாங்க. அதைத்தான் நான் இப்போது பலருக்கும் செய்து கொடுத்து வருகிறேன். ராகி, பச்சைப்பயறை முளைக்கட்டி, அதனை உலர வைத்து பின் அரைத்து லட்டு செய்கிறோம். ஆம்லா, பீட்ரூட் இதனை சின்னச் சின்னதாக துருவி உலர வைத்து, அரைத்து, அனைத்து சிறுதானியங்கள் கொண்ட மாவு, நெய் நாட்டுச் சர்க்கரை சேர்த்து எப்போதும் போல லட்டு பிடிக்க ஆரம்பிப்போம். கறிவேப்பிலை, முருங்கைகீரையும் நன்கு கழுவி உலர வைத்து பொடித்து, உடன் சிறுதானிய மாவு சேர்த்து லட்டு செய்து கொடுக்கிறோம்.

நாங்க லட்டுக்கு நெய் மட்டுமில்லாமல், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயும் சேர்க்கிறோம். காரணம், நம்ம வீட்டில் பாட்டி உளுந்தங்களியை நல்லெண்ணையோடு சேர்த்துதான் தருவாங்க. இதில் நெய்யும் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் நல்லெண்ணைக்கு இருக்கும் மணம் மற்றும் சுவை நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது கிடைக்காது.

முதலில் எனக்கும் எனது குழந்தைகளுக்காகத்தான் செய்ய துவங்கினேன். தற்போது இதனையே ஒரு தொழிலாக செய்வேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கல. ஏன் யாராவது அப்படிச் சொல்லி இருந்தாலும் நான் நம்பி இருந்திருக்க மாட்டேன். ஆனால் தற்போது இந்த வேலையை போல் வேறு எதிலும் அவ்வளவு சுவாரஸ்யம் இருக்குமா என்றால் இல்லை என்றுதான் நான் சொல்வேன். ஒவ்வொரு முறையும் புதிதாக என்ன பொருட்களை சேர்த்து லட்டு செய்யலாம்னு யோசித்து செய்யும் போது அதில் கிடைக்கும் மனத்திருப்திக்கு ஈடே கிடையாது.

எல்லாவற்றையும் விட ஒன்றை புதிதாக செய்யும் போது அதன் சுவை மற்றும் வாடிக்கையாளர்களின் விமர்சனம் என அனைத்தையும் மனதில் கொண்டுதான் செய்யவே ஆரம்பிப்போம். என்னிடம் லட்டு வாங்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதன் விலை கொஞ்சம் அதிகம் என்று சொன்னாலும், தரத்திற்கு ஏற்ற விலை என்று அதை ஏற்றுக் கொண்டதால்தான் மீண்டும் மீண்டும் ஆர்டர் செய்கிறார்கள்.

ஒரு சிலர் வீட்டில் பாட்டி செய்து கொடுத்த போது சாப்பிட்டது, அதன் பிறகு எங்கும் கிடைக்கல. இப்போது நீங்க செய்து கொடுப்பது என் பாட்டியை நினைவுப்படுத்துதுன்னு சொல்வாங்க. இவை அனைத்தும் ஃப்ரெஷ்ஷாக செய்வதால், தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கறோம்… இப்படி என் வாடிக்கையாளர்கள் சொல்வதைக் கேட்கும் போது, மற்றவர்களின் ஆரோக்கியத்தில் நம்மால் முடிந்த அளவு நல்லது செய்கிறோம்னு மனசுக்கு சந்தோஷமா இருக்கு’’ என்று புன்னகைக்கிறார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post குழந்தைகள் விரும்பும் ஆம்லா, பீட்ரூட் லட்டுகள்! appeared first on Dinakaran.

Related Stories: