இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஒமிக்ரான் அசுர வேகத்தில் தாக்குதல்: பாதிப்பு விகிதம் 3ல் இருந்து 73 சதவீதமாக அதிகரிப்பு

நியூயார்க்: இங்கிலாந்தைப் போல அமெரிக்காவிலும் ஒமிக்ரான் பரவல் தீவிரமடையத் தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் இதன் பரவல் எண்ணிக்கை 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், இந்தியா உட்பட 90 உலக நாடுகளில் பரவி உள்ளது. வேகமாக பரவும் இந்த வகை வைரஸ், இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவிலும் ஒமிக்ரானின் கோர தாண்டவம் தொடங்கி விட்டதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.இதுவரை அமெரிக்காவில் ஒமிக்ரான் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,500 மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தினசரி பாதிப்பு கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. எனவே, கடந்த ஒருவாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 73 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று இருக்கலாம் என அமெரிக்க நோய் தடுப்பு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இங்கு சராசரியாக ஒருநாளைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான புதிய தொற்று எண்ணிக்கைகள் பதிவாகத் தொடங்கி உள்ளன. இதன்படி பார்த்தால் ஒரு வாரத்தில் சுமார் 6.5 லட்சம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் என நோய் தடுப்பு மைய இயக்குநர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறி உள்ளார்.இந்நாட்டில் கடந்த நவம்பர் வரையில் புதிய தொற்றுக்கான 99.5 சதவீத காரணம் டெல்டா வைரஸ் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் டெல்டாவின் இடத்தை ஒமிக்ரான் பிடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 மடங்கு ஒமிக்ரான் பரவல் அதிகரித்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நியூயார்க் மற்றும் வேறு சில மாகாணங்களில் 90 சதவீதம் புதிய தொற்றுக்கு ஒமிக்ரான் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உலகிலேயே அதிகமாக இங்கிலாந்தில் இதுவரை 45,000க்கும் அதிகமான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கூட குறைவான மதிப்பீடாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், ஒமிக்ரானின் மரபணுவை உறுதிபடுத்த தாமதம் ஆவதாலும், அனைத்து கொரோனா பாதிப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படாததாலும், இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக என கூறப்படுகிறது. இந்த நாட்டில் நேற்று முன்தினம் 10 ஆயிரமாக இருந்த ஒமிக்ரானின் தினசரி பாதிப்பு, நேற்று 12 ஆயிரத்தை கடந்தது. இதற்கிடையே அமெரிக்காவில் முதல் முறையாக டெக்சாஸ் மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஒருவர் ஒமிக்ரான் தொற்றால் உயிரிழந்துள்ளார்….

The post இங்கிலாந்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஒமிக்ரான் அசுர வேகத்தில் தாக்குதல்: பாதிப்பு விகிதம் 3ல் இருந்து 73 சதவீதமாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: