டெல்லியில் முகாம் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் பாஜவில் இணைகிறார்?

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பாக தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து,சம்பாய் சோரன் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஹேமந்த் சோரனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, சம்பாய் சோரன் பதவியை ராஜினாமா செய்து, ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகி உள்ளார்.

இந்நிலையில், கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் சம்பாய் சோரன் பாஜவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் நேற்று டெல்லி வந்தடைந்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘இது எனது தனிப்பட்ட பயணம். பாஜ தலைவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த போது கசப்பான அவமானத்தை அனுபவித்தேன். அந்த அவமானங்களுக்குப் பிறகு மாற்று வழியை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார். சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரசை சேர்ந்த 6 அதிருப்தி எம்எல்களுடன் பாஜவில் இணைவார் என கூறப்படுகிறது.

* பாஜ மீது முதல்வர் ஹேமந்த் தாக்கு

சம்பாய் சோரன் டெல்லி சென்றதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட்டின் கோடாவில் அரசு நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், ‘‘குஜராத், அசாம், மகாராஷ்டிராவில் இருந்து ஆட்களை பாஜ அழைத்து வரும். அவர்கள் கட்சிகளை உடைப்பார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவார்கள். அவர்களுக்கு சவால் விடுக்கிறேன், இன்றைக்கு ஜார்க்கண்ட்டில் தேர்தல் நடத்தினாலும், பாஜவை ஒட்டுமொத்தமாக வீழ்த்திக் காட்டுவோம். பாஜவினர் ஆக்கிரமித்துள்ள வரையிலும் தேர்தல் ஆணையம் சுதந்திரமான அரசியலமைப்பு நிறுவனமாக இருக்க முடியாது’’ என்றார்.

The post டெல்லியில் முகாம் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் பாஜவில் இணைகிறார்? appeared first on Dinakaran.

Related Stories: