ஆவணி மலர்ந்தது; குருவாயூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

திருவனந்தபுரம்: மலையாள மாதமான சிங்ஙம் (ஆவணி) பிறந்ததால் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் இன்று நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. மேலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகவான் விஷ்ணு 10 அவதாரங்கள் எடுத்தாலும், அவற்றில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் பல பின்னணி கதைகள் கொண்டது கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பற்பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் திருத்தலத்தில் இக்கோயில் உள்ளது. இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இத்திருத்தலம் அறியப்படுகிறது.

இந்நிலையில் ஆவணி (சிங்ஙம்) மாதத்தின் 2ம் நாளான இன்று குருவாயூர் கோயிலில் ‘இல்லம் நிற’ என்ற நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. இதில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை இறைவனுக்கு சமர்ப்பித்து பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக நேற்றே நெற்கதிர்கள் ெகாண்டு வரப்பட்டுள்ள. இன்று (18ம் தேதி) காலை மேல்சாந்தி பள்ளிச்சேரி மதுசூதனன் நம்பூதிரி நெற்கதிர்களுக்கு பூஜை செய்து குருவாயூரப்பனின் திருப்பாதங்களில் நெற்கதிர்களை சமர்ப்பித்தார். பின்னர் பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

வரும் 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி மற்றும் 28ம் தேதி கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகளாக கொண்டாடப்படுகின்றன. கண்ணன் பிறந்த நாளான அஷ்டமி ரோகிணி அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கிருஷ்ணனை தரிசிக்க வருவர். அன்று நெய்யில் தயாரிக்கப்பட்ட ரொட்டி முக்கிய பிரசாதமாக வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு ஆடம்பரமான பிறந்தநாள் விருந்தும் வழங்கப்படுகிறது. இதையடுத்து ஓணப்பண்டிகை கொண்டாட்டம் தொடங்குகிறது. அத்தம் முதல் கண்ணன் முன் விதவிதமான மலர்களால் அத்தப்பூ கோலங்கள் பக்தர்களால் இடப்படும். மலையாள மாதமான சிங்ஙம் (ஆவணி) பிறந்ததால் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் கொண்டாட்டம், பக்தர்கள் கூட்டம், திருமண நிகழ்ச்சிகள் என இப்போதே கலகலக்க தொடங்கி உள்ளது.

The post ஆவணி மலர்ந்தது; குருவாயூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: