சின்னசேலம் அருகே பரபரப்பு வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 21 பேர் படுகாயம்

சின்னசேலம், ஆக. 17: சின்னசேலம் அருகே வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 21 ேபர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வீ.மாமந்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவிழா ஏற்பாடு நடந்தது. அப்போது மைதானத்தில் பெரியவர்கள் உட்கார்ந்தும், சிறுவர்கள் விளையாடிக்கொண்டும் இருந்தனர். இரவு 9.30 மணியளவில் அங்கு புகுந்த வெறிநாய் ஒன்று வீ.மாமந்தூரை சேர்ந்த சித்ரா(20), பாப்பா(60), லட்சுமணன்(13), லட்சுமி(65), அஜய்(15), சின்னதுரை(30) உள்ளிட்ட 9 பேரை கடித்து குதறியுள்ளது.

இதையடுத்து காயம்பட்ட 6 பேர் சின்னசேலம் அரசு மருத்துவமனையிலும், லேசாக காயம்பட்ட 3 பேர் நைனார்பாளையம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து 9 பேரை கடித்த வெறி நாயை அடித்து விரட்டி உள்ளனர். இந்நிலையில் அந்த வெறிநாய் பக்கத்து ஊரான பனையந்துரை சேர்ந்த செல்லம்(37), யாழினி(8), யோகேஷ்வரி(7), ஹரிஷ்(7), புகழ்(10), காவ்யா(8), வெங்கடேஷ்(38), அழகப்பன்(80), வல்லரசு(23) உள்ளிட்ட 12 பேரையும் கடித்து குதறி உள்ளது. இதையடுத்து லேசான காயம் அடைந்த 8 பேர் நைனார்பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினர். அதிக காயம்பட்ட வீ.மாமந்தூர், பனையந்தூர் கிராமங்களை சேர்ந்த 15 பேர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், வேளாண் அட்மா குழு தலைவர் கனகராஜ் ஆகியோர் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அதைப்போல சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் நிர்வாகிகளுடன் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவம் குறித்து கேட்றிந்து ஆறுதல் கூறினார். பின்னர் சிகிச்சை பெறும் அனைவருக்கும் பிரட், பிஸ்கட், பழ சாறு, தண்ணீர் பாட்டில் வழங்கினார். மேலும் மருத்துவரிடம் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கடியின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார். 21 பேரை வெறிநாய் கடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சின்னசேலம் அருகே பரபரப்பு வெறிநாய் கடித்து சிறுவர்கள் உள்பட 21 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: