நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழையால் நடப்பாண்டில் 3வது முறை நிரம்பி மகிழ்ச்சி தந்த மருதாநதி அணை: முதல் போகத்திற்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு

பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால், அய்யம்பாளையம் மருதாநதி அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே, அய்யம்பாளையம் பகுதியில் 72 அடி உயரமுள்ள மருதாநதி அணை உள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர் மற்றும் மேற்குதொடர்சி மலைப் பகுதிகளில் மழை பெய்தால், இந்த அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் தற்போது அணை நிரம்பியுள்ளது. இதனால், அணைக்கு வரும் 100 கனஅடி நீர் பிரதான கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

அணையில் தற்போது 183 மில்லியன் கனஅடி நீர் இருப்பில் உள்ளது. அணை முழு கொள்ளளவுடன் உள்ளதால், அணை பொறியாளர் கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘இந்த அணை மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பயன்பெறுகின்றன. அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் கண்மாய்களுக்கு செல்கிறது. அடுத்த மாதம் முதல்போக பாசனத்திற்கு அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

இந்த அணை மூலம் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய 3 ஊராட்சிகள் ஆகியவற்றிற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி தண்ணீர் மூலம் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், முதல்போக பாசனத்திற்கு விதை நெற்களை விவசாயிகள் சேகரித்து வருகின்றனர். நடப்பாண்டில் அணை 3வது முறையாக நிரம்பியுள்ளதால் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு நெல் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழையால் நடப்பாண்டில் 3வது முறை நிரம்பி மகிழ்ச்சி தந்த மருதாநதி அணை: முதல் போகத்திற்கு அடுத்த மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: