ஆடி கடைசி வெள்ளி; சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்


திருச்சி: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருச்சி சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி அம்மன்களுக்கு உகந்த மாதம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இன்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதும், சக்தி தலங்களில் முதன்மையானதுமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

இதேபோல், அருகே உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டது. அகிலாண்டேஸ்வரி அம்மன் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல் உறையூர் வெக்காளியம்மன், தொட்டியம் மதுரை காளியம்மன், முசிறி கள்ளத்தெரு மகா மாரியம்மன், தா.பேட்டை பெரிய மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

The post ஆடி கடைசி வெள்ளி; சமயபுரம், திருவானைக்காவல் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: