கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சுதந்திர தின விழாவை ஒட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்ைட கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, சுதந்திர தின தேநீர் விருந்து அளித்தார். கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்ரவி வரவேற்று நிகழ்ச்சி மேடைக்கு அழைத்துச் சென்றார். முதல்வருடன் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகிய இருவரும் விழாவில் பங்கேற்ற அனைவரையும் நேரில் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். மாலை 5.30 மணிக்கு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது அருகில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சுதந்திர தின மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கவர்னர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இதைத்தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து தேநீர் அருந்தினர். தேநீர் விருந்துக்கு பிறகு முதல்வரை கவர்னர் வழியனுப்பி வைத்தார்.

தேநீர் விருந்தில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, பாஜ தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

The post கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ரவி தேநீர் விருந்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: