தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் நேற்று தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசியதாவது:
இந்த திருநாளின் வெற்றிச் சின்னமாக விளங்கும் நம் தேசியக் கொடியை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக முகப்பில், ஓங்கி உயர்ந்து நிற்கும் கம்பத்தில் ஏற்றி வைத்துப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ளோம். விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974ம் ஆண்டு பெற்று தந்தவர் கலைஞர். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான். மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதற்கான போராட்டம். கலைஞர் அன்று பெற்றுத்தந்த உரிமையின்படி, அவரது நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில், இன்று நானும், நான்காவது ஆண்டாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காக பெருமை அடைகிறேன். இந்த அருமையான வாய்ப்பை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு தந்த எனதருமை தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குரியவன் ஆவேன்.
இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு வாரியங்கள் மூலமாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசு துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்று, கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், வரும் ஜனவரி 2026க்குள், அதாவது இன்னும் 16 மாதங்களுக்குள் பல்வேறு பணி நியமனங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி, வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு தொழிற்துறையில் புதிய பாய்ச்சலை கண்டு வருகிறது. அதற்கு அடையாளமாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடந்த “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்” முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது. இதன் மூலம், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.
தமிழ்நாட்டை தொழில்வளம் நிறைந்த, வளமான மாநிலமாக வளர்த்தெடுக்க, தொழிற்துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். அவற்றில் முக்கியமானவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால்,
* எறையூரில் தொழில்பூங்கா
* சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் “நிதிநுட்ப நகரம்”
* திருச்சி மற்றும் மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள்
nவிழுப்புரம், திருப்பூர், வேலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் “மினி டைடல் பூங்காக்கள்”
* ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடிய வசதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையம்
* திருவள்ளூர் மாவட்டத்தில், 182 ஏக்கர் நிலப்பரப்பில் 1,428 கோடி ரூபாயில் பல்முனைய சரக்கு போக்குவரத்துப் பூங்கா
* கோயம்புத்தூர் மாவட்டத்தில், சுமார் 300 கோடி ரூபாய் திட்டத்தில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா
* தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் இயங்கும் இஸ்ரோ விண்வெளி நிலையத்திற்கு அருகில் ஒரு விண்வெளி தொழிற்பூங்கா மற்றும் திட எரிபொருள் பூங்கா ஆகியவற்றை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக, இந்த வீர விடுதலை திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
* தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
* தாய்நாட்டிற்காக இளம் வயதை ராணுவ பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
* அடுத்த 2 ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.
சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்னையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கூட, நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளோம். தமிழ்நாட்டிலும், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலைநில பகுதிகள் அதிகம் உள்ளன. அங்கு பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களை கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்கும். அதன் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செயல்படுத்தி தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை தினமும் ஈடுபடுத்தி வருகிறேன். இந்தியாவுக்கு வழிகாட்டியாக, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு அளித்து வரும் வெற்றியின் மூலமாக தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பேன்.
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. இந்திய நாடு இன்னல்களை வென்ற நாடு மட்டுமல்ல, உலகுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டிய நாடு. அத்தகைய இந்திய நாட்டின் பொறுப்புமிக்க குடிமக்களாகிய நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி: நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்; நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூ.21,000ஆக உயர்வு
சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
The post பொங்கல் முதல் குறைந்த விலையில் மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: சுதந்திர தின உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.