கிராமப்புற கோயில்களில் பணிகளை மேற்கொள்ள தலா ₹2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், அறநிலையத்துறை சார்பில் 1,250 கிராமப்புறத் கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகளை மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து புதிய உத்வேகத்துடன் அறநிலையத் துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

2021 – 22ம் ஆண்டிற்கான அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில், கிராமப்புறக் கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ஒரு லட்சத்தை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா 1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 20-24 ம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புற கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில்களில் பணிகள் மேற்கொள்ள தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 50 கோடி ரூபாய்க்கான வரைவோலைகளை தமிழ்நாடு முதல்வர்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அறநிலையங்கள் துறை செயலாளர் பி.சந்தரமோகன், ஆணையர் தர், கூடுதல் ஆணையர் சுகுமார், இணை ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கிராமப்புற கோயில்களில் பணிகளை மேற்கொள்ள தலா ₹2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 கோடிக்கான வரைவோலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: