தறிகெட்டு ஓடிய கார் மோதி 2 தூய்மைப் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் காயம்: எம்பிபிஎஸ் மாணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி

ஆலந்தூர்: பல்லாவரம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (25). தனியார் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று காலை தனது காரில், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். மீனம்பாக்கம் சிக்னல் வந்தபோது பாலமுருகன் கார் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்துள்ளார்.

இதனால், சீறிப்பாய்ந்த கார் சாலையை கடந்து சென்று கொண்டிருந்த 4 பள்ளி மாணவிகள், 2 தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. இதில் 6 பேரும் பலத்த காயமடைந்தனர். பொதுமக்கள், அவர்களை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த மருத்துவ மாணவனை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த பரங்கிமலை போக்குவரத்து புல்னாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மருத்துவ கல்லூரி மாணவனை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில், மீனம்பாக்கம் ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி, திரிசூலத்தை சேர்ந்த ரித்திகா (16), அதே பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ராஜ(14) மற்றும் 12ம் வகுப்பு மாணவி பவித்ரா (17), வைஷ்ணவி (16), கன்டோன்மென்ட் போர்டு தூய்மை பணியாளர்கள் அங்கையா (60), ராவ் (60) ஆகிய 6 பேருக்கும் தோள்பட்டை, முதுகெலும்பு, கால்கள், கைகள் முறிந்ததால், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post தறிகெட்டு ஓடிய கார் மோதி 2 தூய்மைப் பணியாளர்கள் பள்ளி மாணவிகள் காயம்: எம்பிபிஎஸ் மாணவனுக்கு பொதுமக்கள் தர்ம அடி appeared first on Dinakaran.

Related Stories: