ரவுடி வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி பரிமாற்றம்: 7 பேரிடம் போலீஸ் விசாரணை

கடலூர்: ரவுடியின் வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி பரிமாற்றம் நடந்துள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பேர்பெரியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (25). கடலூர் மாவட்ட ரவுடிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் நிலைய குற்ற பதிவேட்டு குற்றவாளியான இவரது வங்கி கணக்கில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.2.5 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதால் வங்கி அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.  இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அசோக்குமாரிடம் கேட்டபோது, பங்கு சந்தையில் முதலீடு செய்து இருப்பதாகவும், அதிலிருந்து வரப்பட்ட தொகை எனவும் கூறியுள்ளார். இதுபற்றி வங்கி நிர்வாகத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அசோக் குமார் பங்கு சந்தையில் முதலீடு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த பணம் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்த பரிமாற்றம் செய்யப்பட்டது என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து முத்தாண்டிகுப்பம் போலீசார் அவரைப் பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர். இதை அறிந்த அசோக்குமார் வங்கி கணக்கில் இருந்து சுமார் 2 கோடி ரூபாயை நண்பர்களுக்கு ஆன்லைன் மூலம் திடீரென அனுப்பியுள்ளார். தற்போது ரூ.50 லட்சம் மட்டுமே அவரது வங்கி கணக்கில் உள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசார் ரவுடி அசோக்குமாரின் வங்கி கணக்கை அதிரடியாக முடக்கினர். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவரிடம் தொடர்பில் உள்ள 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ரவுடி வங்கிக் கணக்கில் ரூ.2.5 கோடி பரிமாற்றம்: 7 பேரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: