சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

திருவள்ளூர்: சுதந்திரதின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து நாள்தோறும் பல ஆயிரக் கணக்கானோர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் மூலம் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி துணை ஆணையர் ராமமூர்த்தி ஆகியோரின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, சப் இன்ஸ்பெக்டர்கள் வினாயக மூர்த்தி, வெங்கடேசுலு, ரவி உள்ளிட்ட படை அங்கத்தினர் மற்றும் ரயில்வே இருப்பு பாதை காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் மற்றும் திருத்தணி வந்த ரயில்களில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

அப்போது, பாதுகாப்பான முறையில் ரயில் பயணம் செய்யவேண்டும், சந்தேகப்படும்படியான பொருட்கள் மற்றும் பைகள் இருந்தால் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், படியில் அமர்ந்து கொண்டு கவனக்குறைவாக பயணம் செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிறகு ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலைத்திற்கு வந்த அனைத்து பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக பரிசோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.

The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Related Stories: