கொழுமம் வனப்பகுதியில் கற்கால கற்திட்டை கண்டுபிடிப்பு

உடுமலை: உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்கு மலைத்தொடர்ச்சியில் வாழ்ந்த வள்ளல் பெருமக்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், ஒருவன்தான் குமண வள்ளல். அந்த குமண வள்ளல் ஆட்சி செய்த பகுதி நம்முடைய கொழுமம் பகுதி ஆகும். இந்த, வரலாற்றினை ஆய்வு செய்து வரும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் கள ஆய்வாளர்கள் அருட்செல்வன், சிவகுமார் ஆகியோர் கொழுமம் பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், கொழுமத்திற்கும், ஆண்டிபட்டிக்கும் இடையில் உள்ள மலைக்குன்றில் கற்திட்டைகள் இருப்பதும், முதிரமலை என்பதற்கான அடையாளமாக கொள்ளுச்செடி இருப்பதையும் உறுதிப்படுத்தினர். முதிரம், முதிரமலை என்பது தமிழிலும், மலையாளத்திலும் நாம் உணவில் உட்கொள்ளும் கொள்ளுச்செடிகள் நிறைந்த மலைப்பகுதியாக இருப்பதால் முதிரமலை என்பதையும் நேரில் ஆய்வு செய்து உறுதிபடுத்தினர்.

மேலும், சங்க இலக்கிய பாடல்களில் கூறப்படும் மலையரண், காடரண் என்ற செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் வட்டார வழக்கில் கரடு மலை என்று சொல்வதை இலக்கியங்களில் காடரண், மலையரண் என்று சொல்லியிருப்பதை நேரில் கண்டு உறுதிபடுத்தியுள்ளனர். மேலும், கொழுமத்திலிருந்து தெற்கில் பார்க்கும் போது மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் கரடுகள், குன்றுகள் அனைத்தும் காடரண், மலையரண் கொண்டவை. இந்த மலைகளுக்குள் 2 ஏக்கர் பரப்பளவில் காடுகள் இருப்பதையும் அதில் கொள்ளு எனும் முதிரச்செடிகள் இருப்பதையும் நேரில் கண்டு உறுதிபடுத்தினர். முதிரை மலை என்பது கொள்ளுச்செடிகள் நிறைந்த மலை என்பதற்கும், முதிரைமலைத் தலைவன் குமணன் வசித்தமைக்கான சான்றுகளாக இலக்கியங்கள் கூறுவது இவ்விடங்கள் என்பதையும் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி உறுதிப்படுத்தினார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இந்த மலைப்பகுதியில் மானாவாரியாக கொள்ளு பயிர் செய்திருப்பதையும் தற்போது அங்கிருந்து மக்கள் வெளியேறி கொழுமம், பாப்பம்பட்டி பகுதியில் குடியேறி இருப்பதையும் உறுதிப்படுத்துகின்றனர். இவ்விடத்தைப் பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறுகையில்,“பாண்டியராஜா மடம் என்று கூறுகின்றனர். இது போன்ற கற்திட்டைகள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் குறிப்பாக மன்னவனூர், கூக்கால் போன்ற பகுதிகளில் அதிகளவில் கற்திட்டைகள் இருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதற்கேற்றாற்போல் பெரிய அளவில் கற்திட்டை இருப்பதும், அதனருகே சுமார் 15 அடிக்கும் மேல் ஒரே பாறைக்கல்லில் கற்கால கற்திட்டை இருப்பதையும் நேரில் ஆய்வு செய்து உறுதிபடுத்தினர்’’ என்றனர்.

The post கொழுமம் வனப்பகுதியில் கற்கால கற்திட்டை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: