எங்கள் பெயர்களை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை கமிஷனரிடம், அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் மனு

மதுரை: தங்கள் பெயர்களை தவறாகப் பயன்படுத்தி பொய் புகார் தயாரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி, அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்.

மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளுடன், அறநிலையத்துறை அலுவலக பெண் ஊழியர்கள் பெயரில் ஒரு புகார் மனு சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை நேற்று முன்தினம் செல்லத்துரை மறுத்து, இதுகுறித்து விசாரித்து உரிய நபர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்திருந்தார்.

மதுரையில் மீனாட்சி அம்மன் மற்றும் திருப்பரங்குன்றம், அழகர்கோவில் உள்ளிட்ட கோயில்கள், விருதுநகர், தேனி மாவட்டங்களில் பணிபுரிவோர் என இந்து அறநிலையத்துறை அலுவலங்களில் பணிபுரியும் பெண் செயல் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பெண்கள் நேற்று மதுரை நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அவர்கள் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:
எங்களது பெயர்களை பயன்படுத்தி மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை மீது தவறான பாலியல் பொய்யான புகார் மனு, கடந்த சில நாட்களாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார் எங்களால் அளிக்கப்படவில்லை. இணை கமிஷனர் செல்லத்துரை எந்த ஒரு பெண் அலுவலரிடமும் புகாரில் குறிப்பிட்டுள்ளவாறு நடந்து கொண்டது கிடையாது. பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக தவறான செய்தியை யாரோ விஷமிகள் பரப்பியுள்ளனர். ஒரே நபரே வெவ்வேறு கையெழுத்துகளை போட்டு இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இச்செயல் மதிப்புமிக்க பதவிகளில் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது.

இணை கமிஷனரை நேரடியாக எதிர்க்க துணிச்சலின்றி இப்படி தவறாக எங்களது பெயரை பயன்படுத்தி துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்விதமாகவும், குடும்ப பெண்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் நபர் யாராக இருந்தாலும், அவர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post எங்கள் பெயர்களை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதுரை கமிஷனரிடம், அறநிலையத்துறை பெண் ஊழியர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: