அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28ம் நாள், பேரறிஞர் பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது. அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., பவள விழாப் பொதுக் கூட்டத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் தலைமையேற்கிறார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக தலைவர வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, அதியமான், திருப்பூர் அல்தாப், பி.என். அம்மாவாசி உள்ளிட்டோர் பவள விழாக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்குகின்றனர். நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்.

செப்டம்பர் 28ம் தேதி காலை பணப்பாக்கம் தொழிற்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்திரசேகரன் முன்னிலையில் அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.

பிறகு பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிக்கு வருகிறேன். உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம். கொள்கைத் தோழமைகளுடன் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கழகத்தின் பவள விழாவை. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறியுள்ளார்.

The post அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: