தமிழை மொழிப்பாடமாக படித்தவர்களுக்கே உயர்கல்வியில் இடம் என கூறும் நிலை வர வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை: சென்னை வளர்ச்சிக்கழகம், பன்னாட்டு தமிழ் மொழிப் பண்பாட்டு கழகம் மற்றும் அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் சார்பில், 2வது உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், சி.பி.எஸ்.சி.யில் கூட தமிழை ஒரு மொழிப் பாடமாக கொண்டு வர வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இதற்கான நடவடிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் கொண்டு வருவார் என நம்புகிறேன். மேலும் பள்ளிக் கல்வியில் தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்தவர்களுக்கே ‘தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வியில் இடம் என்று கூறினால், அனைத்து மாணவர்களும் தமிழ்க் கல்வியை படிக்கும் வாய்ப்பு ஏற்படும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும்’ என்று பேசினார்.

மாநாட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் ‘சட்டத் தமிழ்’ எனும் புதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வி.ஜ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேசும்போது, நாடாளுமன்றத்தில் முந்தைய காலங்களில் சபாநாயகர் மற்றும் உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசியதாகவும், தற்போது இந்தியாவின் தலைநகர் இந்தி தலைநகராக மாறி இருப்பதாகவும், அந்த நிலை மாற வேண்டும் என்றும் கூறினார்.

அமைச்சர்கள்செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ்பொய்யா மொழி ஆகியோரும் பங்கேற்றனர். சென்னை வளர்ச்சிக்கழகம் பன்னாட்டு தமிழ் மொழிப் பண்பாட்டு கழகத்தின் தலைவர் சம்பத், வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், வி.ஜி.பி. நிறுவனங்கள் தலைவர் வி.ஜி. சந்தோசம், முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post தமிழை மொழிப்பாடமாக படித்தவர்களுக்கே உயர்கல்வியில் இடம் என கூறும் நிலை வர வேண்டும்: அமைச்சர் பொன்முடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: