நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரி கேள்வி தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா?

சென்னை: தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்று நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரியாக கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மை பொதுச் செயலாளருமான துரை வைகோ பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் வெளிவுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் 6000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இப் பிரச்னையானது முன்பை விட மோசமான நிலையை அடைந்திருப்பதால் ஒன்றிய அரசின் மீது தமிழக மீனவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக குஜராத் மாநில மீனவர்கள் கடலோர காவல்படை, கடற்படை என ஒன்றிய அரசின் அனைத்து ஆதரவையும் பெற்றுள்ளனர். அவர்கள் எந்தவிதமான பிரச்சினையில் சிக்கினாலும், உடனடியாக அவர்களை காப்பாற்றுவதற்கு இந்த அமைப்புகள் ஓடோடி வருகின்றன. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இந்தியா-இலங்கை கச்சத்தீவு ஒப்பந்தங்கள் பரிபூரணமாக செயல்படுத்தப்படாமல், அவை நமது தமிழ் மீனவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டன என்பது தெரியும்.

ஆனால், ஒன்றிய அரசு இந்த பிரச்சினையை தீர்க்க உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா என தெரியவில்லை. தமிழக மீனவர்களை இந்த நாட்டின் குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? என்றும் தெரியவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் ஓர் அங்கமாக ஒன்றிய அரசு கருதுகிறதா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை. எனவே, மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நாடாளுமன்றத்தில் துரை வைகோ சரமாரி கேள்வி தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக ஒன்றிய அரசு கருதுகிறதா? appeared first on Dinakaran.

Related Stories: