இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023ம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024ம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் 2024-2025ம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்விமுடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3,28,000 கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் தொடங்கி வைக்கிறார்.
இதற்காகமுதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை செல்கிறார். காலை 11.15 மணிக்கு கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களை திறந்துவைக்கிறார். இதன்பிறகு காரில் உக்கடம் செல்கிறார்.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பிறகு, அவர் காரில் மேம்பாலத்தில் பயணிக்கிறார். இதன்பின்னர், கருமத்தம்பட்டி செல்கிறார். கோவை-அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த சிலை 8.5 அடி உயரம், 750 கிலோ எடை கொண்டது. இதன் அருகில், கலைஞர் அறிவு சார் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் 1,500க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் அருகில், 116வது சட்டமன்ற தொகுதியாக விளங்கும் சூலூர் சட்டமன்ற தொகுதியை அடையாளப்படுத்தும் வகையில், 116 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பத்தில் 24 அடி உயரம், 18 அடி அகலம் கொண்ட திமுக கொடியை முதல்வர் ஏற்றி வைக்கிறார். இதன்பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பீளமேடு விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
The post மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்: கோவையில் நடக்கும் விழாவில் உக்கடம் மேம்பாலம், கலைஞர் முழு உருவ சிலையையும் திறக்கிறார் appeared first on Dinakaran.