குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரை நேற்று ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கௌதமன், என்.பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுகளை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, தான் நிரபராதி, தனக்கு எதிரான இந்த வழக்கு புனையப்பட்ட வழக்கு. அமலாக்கத்துறை தன் மீது கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட இந்த பொய் வழக்கை எதிர்கொள்கிறேன். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன். தான் குற்றத்தில் ஈடுபடவில்லை, குற்றவாளியும் இல்லை என்றார். இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், அன்றை தினம் 3 சாட்சிகள் ஆஜராக சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆதாரமில்லாத இந்த பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்டுள்ளதாக செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
The post அமலாக்கத் துறை வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு: சாட்சிகள் விசாரணை 16ம் தேதி தொடங்கும் appeared first on Dinakaran.