இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்து நாள்தோறும் அதிகாலை 3.30 மணியளவில் 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு வந்து சேரும். பின்னர், இங்கிருந்து மீண்டும் அதிகாலை 5.35 மணியளவில் பயணிகளுடன் லண்டனுக்குப் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் லண்டனில் இருந்து சுமார் 240 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.
அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் லண்டனுக்கே திரும்பி சென்று தரையிறங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்ய முடியாததால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர். அதே நேரம், சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் லண்டனுக்கு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்வதற்கு அதிகாலை 2.30 மணிக்கு முன்பாகே சுமார் 210 பயணிகள் காத்திருந்தனர்.
எனினும், லண்டனில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை வரவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதால், இன்று அதிகாலை லண்டன் செல்லவேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் புறப்பாடு திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒருசில பயணிகள் துபாய், தோகா, அபுதாபி வழியாக லண்டனுக்கு செல்லும் மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர். எனினும், சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக நேரடியாக செல்ல முடியாமல் 200க்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, லண்டனுக்கு செல்லவேண்டிய பயணிகள், சென்னை நகரின் பல்வேறு ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். நாளை அதிகாலை சென்னையில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
The post சென்னை விமானநிலையத்தில் லண்டன் செல்லும் விமானம் இன்று திடீர் ரத்து: 210 பயணிகள் அவதி appeared first on Dinakaran.