குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் 15 ஆண்டுகளாக பரிசு பெறும் கைவினைக் கலைஞர்

மார்த்தாண்டம் ஆக. 8: குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர் ஒருவர் பரிசு பெற்று வருகிறார். இந்த ஆண்டும் அவர் தத்ரூபமாக உருவாக்கிய மயிலுக்கு முதல் பரிசு கிடைத்தது. குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வந்த 99 வது வாவுபலி பொருட்காட்சி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. பொருட்காட்சியில் ஆண்டுதோறும் கைவினை கலைஞர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக கண்காட்சி நடத்தி பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. கைவினைப் பொருட்களில் மேல்புறம் கடமக்கோடு பகுதியைச் சேர்ந்த சேன்டில் என்பவர் தேசிய பறவை மயிலை தெர்மாகோலில் செய்து வைத்திருந்தார். இது அனைவரின் பார்வையையும் கவர்ந்தது.

பார்ப்பதற்கு இயற்கையாகவே ஒரு மயில் நிற்பதை போன்று தோன்றியது. இந்த மயிலுக்கு முதல் பரிசு கிடைத்தது இவர் கடந்த 15 ஆண்டுகளாக வாவுபலி பொருட்காட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் சிலை, மாட்டு வண்டி, மார்த்தாண்டம் சிஎஸ்ஐ சர்ச் என வித்தியாசமான பல விதமான பொருட்களை செய்து வைத்துள்ளார். இதில் 15 ஆண்டுகள் முதல் பரிசு பெற்றுள்ளார்.
இது தொடர்பாக சேன்டில் கூறியதாவது, நான் மர ஆசாரி பணி செய்து வருகிறேன். தெர்மாகோலில் மயில் செய்து வைத்து இந்த ஆண்டு பொருட்காட்சியில் முதல் பரிசு பெற்றுள்ளேன். ஒன்றரை மாதங்களாக நேரம் ஒதுக்கி இதனை உருவாக்கினேன். கடந்த 15 ஆண்டுகள் பல அம்சங்களை செய்து காட்சிக்கு வைத்தேன். கடந்த ஆண்டு மாட்டு வண்டி, வைத்து பரிசு பெற்றேன். தெர்மோகோலில் இது போன்றவைகளை செய்வது எனது பொழுது போக்காகும். அடுத்த ஆண்டு என்ன வைக்க வேண்டும் என்று இப்பவே சிந்திக்க ஆரம்பித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் 15 ஆண்டுகளாக பரிசு பெறும் கைவினைக் கலைஞர் appeared first on Dinakaran.

Related Stories: