தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலை விற்பனையை ஒழிக்கும் வகையில் 391 கூட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், கடந்த 8 மாதங்களில் ரூ.13.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் தீவிர உடல் நல பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசானது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்படி, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்தது.
புகையிலை பொருட்களின் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் இணைந்து தங்களது பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக தீவிர சோதனைகளை நடத்தி, விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு அபராதமும் விதித்து சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கடந்த 8 மாதங்களில் 1,76,699 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், தவறிழைத்தவர்கள் மீது 19,332 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர காவல் துறையினர் நடவடிக்கையினால் மட்டும் இதுவரை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தவறிழைத்தவர்களுக்கு 13,16,24,700 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 8,658 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 99,530 கிலோ குட்கா, உணவு பாதுகாப்புத் துறையினரால் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் ஒரு புதிய யுக்தியாக, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையினரை கொண்டு 391 கூட்டுக் குழுக்கள் உருவாக்கப்பட்டு புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இந்தக் கூட்டுக் குழுக்களின் செயல்பாடுகள் சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளரால் 2 வாரங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகின்றன. காவல்துறையினரின் கடும் நடவடிக்கைகள், உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளும் சோதனைகள், கடைகளுக்கு சீல் வைத்தல், ரூ.25 ஆயிரத்துக்கும் அதிகமாக கடும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதில் நல்ல பலனை தந்துள்ளது. கல்வி நிறுவனங்கள் அருகில் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் இந்த கூட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
The post கடந்த 8 மாதங்களில் ரூ.13.16 கோடி அபராதம் விதிப்பு: கல்வி நிறுவனங்கள் அருகே புகையிலை விற்பனையை ஒழிக்கும் வகையில் 391 கூட்டுக் குழுக்கள்; உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை; டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் appeared first on Dinakaran.