ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி ஊட்டி அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் மேடை அலங்கார பணிகள் மேற்கொள்ள வேண்டும். தீயணைப்புத்துறையினர் மைதானத்தில் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறை முலம் மேடையில் பூந்தொட்டிகள் அலங்காரம் அமைக்க வேண்டும். நகராட்சி சார்பில் விழா நடைபெறும் இடத்தை சுத்தம் செய்து குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 108 அவசர காவல வாகனம் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துைற சார்பில் பழங்குடியினர் நடன நிகழ்ச்சி நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஊட்டியில் நடக்கும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், கூடுதல் எஸ்பி., சௌந்திரராஜன், தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி, தனித்துணை ஆட்சியர் கல்பனா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி, ஆர்டிஓ.,க்கள் மகராஜ், சதீஸ், செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் சரவணன், முகமது ரிஸ்வான், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.