ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாள்தோறும் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி கிளை சிறையில் உள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவசக்தி ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். 5 பேரையும் 7 நாட்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன், பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஹரிஹரன், சிவசக்தி ஆகிய இருவருக்கும் 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் பூவிருந்தவல்லி கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த ரவுடி திருவேங்கடம் போலீஸ் காவலின் போது தப்பியோட முயன்றபோது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: