தூத்துக்குடி,ஆக.6: தூத்துக்குடி முடுக்குகாடு பகுதிக்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை பகுதியில் இருந்து முடுக்குகாடு பகுதிக்கு உப்பளம் வழியாக செல்வதற்கு மண் சாலை உள்ளது. மழை நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் தங்களுக்கு தார் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருச்செந்தூர் ரோட்டில் இருந்து முடுக்குகாடு பகுதிக்கு தார் சாலை அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் ‘‘முடுக்குகாடு பகுதிக்கு மதுரை – தூத்துக்குடி துறைமுகம் பைபாஸ் சாலையில் இருந்து ஏற்கனவே ஒரு சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்செந்தூர் ரோட்டில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பூங்காவிற்கு எதிரே முடுக்குகாடு வரை செல்லும் மண் சாலையில் தார் சாலை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்’’ என்றார்.ஆய்வின்போது போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்டின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடி முடுக்குகாடு பகுதிக்கு புதிதாக தார் சாலை அமைப்பு பணி appeared first on Dinakaran.