ஆடிப்பெருக்கு நாளில் ஆறுகள், வாய்க்கால்களில் புதுவெள்ளம் வரும் என்பதால் அன்றைய நாளில் ஆடிப்பட்ட விதைப்பு பணிக்காக மண்ணை உழுது பண்படுத்துதல் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்குவர். போடி, சின்னமனூர் பகுதியில் மானாவாரி நிலங்கள் அதிகளவில் உள்ளன. இதில், கடலை, துவரை, உளுந்து, கேழ்வரகு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளத்தை ஆடிப்பட்ட விதைக்கும் பணிக்காக கடந்த 2 நாட்களாக மானாவாரி நிலங்களை டிராக்டர், உழவு மாடுகள் மூலம் உழுது பண்படுத்தும் பணியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘விவசாயம் செய்வதற்கு உகந்த காலமாக ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ளது. இவை பட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் பட்டமான ஆடி மாதத்தில் தரிசு பூமியில் உள்ள சீமைக்கருவேல மரம் உள்ளிட்ட தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுதல், பயன்பாட்டில் உள்ள வயல்காட்டில் பழைய காய்ந்த செடி, கொடிகள், அறுவடைக்கு பிறகு எஞ்சியுள்ள பயிர்கட்டைகள் போன்றவற்றை சீரமைப்பு செய்வது போன்ற பணிகளை துவக்கியுள்ளோம். தற்போது மழை இல்லாவிட்டாலும், நம்பிக்கையுடன் மாடுகள் மற்றும் டிராக்டர் கொண்டு ஆயத்தப் பணிகளை செய்து வருகிறோம்’’ என்றனர்.
The post ஆடிப்பட்ட தேடி விதைப்புக்கு நிலத்தை பண்படுத்தும் பணி ஜரூர்: போடி, சின்னமனூரில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.